Mar 27, 2017

உலகம் பிறந்தது எதற்காக?

உலகம் பிறந்தது எதற்காக?

அப்துந் நாஸிர் எம்.ஐ.எஸ்.சி

திருமறைக் குர்ஆனையும், திருநபி வழிமுறையையும் கொள்கையாகக் கொண்ட நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் எத்தனையோ தீமையான காரியங்கள், இணை வைப்புக் காரியங்கள் மலிந்து காணப்படுகின்றன. இவற்றில் பல தீமைகளில் சமுதாயம் தீமையெனத் தெரிந்தே மூழ்கி இருக்கிறது. இதற்கு உதாரணமாக வட்டி, வரதட்சணை, சூதாட்டம், மது பானங்கள், சினிமா போன்றவற்றைக் கூறலாம்.

ஆனால் தீமை என்றே உணரப்படாமல், நன்மை என்ற பெயரில் பல்வேறு இணை வைப்புக் காரியங்கள் தலை விரித்தாடுகின்றன. அவற்றில் ஒன்று தான் ரபியுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் ஊருக்கு ஊர், வட்டத்திற்கு வட்டம் ஓதப்படுகின்ற மவ்லிதுகள் ஆகும்.

மர்யமுடைய மகன் ஈஸா (அலை) அவர்களை, கிறித்தவர்கள் வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழ்ந்து விடாதீர்கள் (புகாரி 3445) என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும் மீறி நபி (ஸல்) அவர்களை இறைவனுடைய அந்தஸ்திற்கு உயர்த்தி அவர்களின் மீது புனையப்பட்ட ஒரு புராணம் தான் இந்த மவ்லிது.

கவிஞர்களை வழிகேடர்கள் தான் பின்பற்றுவார்கள் (அல்குர்ஆன் 26:224) என்ற இறைவனின் கூற்றுக்கேற்ப இந்தக் கவிதை வரிகளின் மூலம் இஸ்லாமிய சமுதாயம் வழிகேட்டில் வீழ்ந்து விட்டது.

நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டி புராணம் பாடிய இந்தக் கவிஞன் தன்னுடைய புராணத்திற்குச் சான்றாக சில இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தன்னுடைய விரிவுரையில் கொண்டு வருகிறான், அதில் ஒன்று தான்,

இந்த மவ்லிது புராணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு செய்தி.

ஒரு ஹதீஸில் அறிவிக்கப்பட்டிருப்பதாவது,

ஆதம் (அலை) அவர்கள் (படைக்கப்பட்டு முதலாவதாக) கண்னைத் திறந்து பார்த்த பொழுது சொர்க்கத்தின் வாசலில் லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ் என்று எழுதப் பட்டிருப்பதைக் கண்டார்கள், இறைவா! ஒருவருடைய பெயரை உன்னுடைய பெயரோடு இணைத்துள்ளாயே! இவர் யார்? எனக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், ஆதமே! இவர் உன் சந்ததிகளில் உள்ளவராவார், இவரை நான் கடைசி காலத்தில் அனுப்புவேன், இவர் இல்லையென்றால் நான் உன்னைப் படைத்திருக்க மாட்டேன் என்று கூறினான்,

ஆதம் (தவறு செய்து) பூமிக்கு இறங்கிய பின் இறைவா! இந்தக் குழந்தையின் பொருட்டால் இந்தத் தகப்பனுக்கு மன்னிப்பளிப்பாயாக! என வேண்டினார்.

ஆதம் (அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலா தேடி இறைவனின் பக்கம் ஒதுங்கினார்கள்.

(இந்த) காரியத்தின் மூலம் மகிழ்ச்சியை ஆதரவு வைத்தார்கள், எனவே அல்லாஹ் அவருக்கு (பாவத்திலிருந்து) வெளியேறு மிடத்தை ஆக்கினான்.

(இந்த செய்தி மவ்லிது புராணத்தின் முதலாவது ஹிகாயத்தின் 8ம் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது)

இதே கருத்து புர்தா என்ற மவ்லிதிலும் இடம் பெற்றுள்ளது.

எவர் தோன்றாவிடில் இல்லாமையிலிருந்து இவ்வுலகம் தோன்றியிருக்காதோ அந்தக் காரண கர்த்தாவை உலகியல் தேவைகளால் எங்கனம் அடிமை கொண்டிட முடியும்?

என்று புர்தாவில் பூசரி கூறுகின்றார்.

இம்மையும், அதன் சக்களத்தியான மறுமையும் உங்களின் சன்மானங்கள் தானே, அஃதன்றி லவ்ஹு எனும் பலகையும் கலம் எனும் எழுது கோலும் உங்கள் ஞானத்தின் பிரதிபலிப்பு தானே

என்றும் புர்தாவில் கூறப்பட்டுள்ளது.

நாகூர் ஹனீபாவும் தன் பங்குக்கு, கோமான் நபிகள் தோன்றாவிட்டால் குர்ஆனும் வந்தே இருக்காது... இந்த வையகம் வந்தேயிருக்காது... என்று பாடி வைத்துள்ளார்.

இந்தக் கருத்தைப் பரவலாக ஆலிம்களும் மீலாது விழா மேடைகளிலும், இதர பயான்களிலும் சொல்லிக் கொண்டு வருகின்றார்கள்.

சுப்ஹான மவ்லிதில் இடம் பெற்றுள்ள இந்தச் செய்தியில் இரண்டு இட்டுக்கட்டப்பட்ட விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.

1.            ஆதம் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலா தேடினார்கள். (இதைப் பற்றிய விபரத்தை வஸீலா என்ற தலைப்பில் பார்வையிடுக)

2.            நபி (ஸல்) அவர்களைப் படைத்திருக்கவில்லையென்றால் அல்லாஹ் ஆதமையும் இவ்வுலகையும் படைத்திருக்க மாட்டான் என்பது.

இந்த வழிகேடன் தன்னுடைய இணைவைப்புக் கவிதை வரிகளுக்கு ஆதாரமாகக் காட்டும் இந்தச் செய்தி திருமறைக் குர்ஆனுக்கு எவ்வாறு முரண்படுகிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்னால் நாம் இதன் அறிவிப்பாளர்களின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவர் கூறக் கூடிய இந்தச் செய்தி சில கருத்துக்கள் மற்றும் வாசகங்கள் கூடுதல் குறைவாக ஹாக்கிம், (பக்கம் 67, பாகம் 2, ஹதீஸ் எண் 4228,) என்ற நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர்களின் வரிசையில் இரண்டு நபர்கள் இடம் பெறுகிறார்கள்,

1. முதலாமவர் அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவராவார்.

இவரைப் பற்றி இவருடைய ஹதீஸைப் பதிவு செய்த இமாம் ஹாகிம் அவர்களே தன்னுடைய அல் மத்ஹலு இலஸ் ஸஹீஹ் என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

இவர் தன்னுடைய தந்தையின் மூலமாக இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிக்கக் கூடியவராவார். இந்தக் குற்றச்சாட்டு இவர் மீது இருக்கிறது என்பதை இந்தத் துறையில் உள்ள யாரும் எளிதில் விளங்கிக் கொள்ளலாம் (பாகம் :1, பக்கம்: 99)

மேற்கண்ட செய்தியும் இவர் தன் தந்தையின் வழியாக அறிவிக்கக் கூடிய செய்தியாகும். மேலும் இவரைப் பற்றி அதிகமான ஹதீஸ் கலை அறிஞர்கள் கடுமையான விமர்சனங் களைக் கூறியுள்ளனர்.

2. இரண்டாமவர் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் அபுல் ஹாரிஸ் அல் ஃபஹ்ரி என்பவராவார்.

இவரைப் பற்றி மீஸானுல் இஃதிதால் என்ற நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

இவர் அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவரிடமிருந்து இஸ்மாயில் பின் மஸ்லமா பின் கஃனப் என்பவர் வழியாக தவறான செய்திகளை அறிவித்திருக்கின்றார். அதில் ஒன்று தான் ஆதமே முஹம்மத் இல்லையென்றால் உன்னைப் படைத்திருக்க மாட்டேன் என்ற செய்தியாகும்.

இதனை பைஹகீ, தலாயிலுன் நுபுவ்வா என்ற நூலில் பதிவு செய்திருக்கின்றார்.

(மீஸானுல் இஃதிதால் பாகம்: 4, பக்கம்: 99 )

மேற்கண்ட செய்தியும் இதே தொடரில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் முஹம்மதே, நீர் இல்லையென்றால் நான் உலகங்களைப் படைத்திருக்க மாட்டேன் என்று அல்லாஹ் கூறியதாக வரக்கூடிய செய்தியும் (நபி (ஸல்) அவர்கள் கூறாத, அவர்களின் பெயரால்) இட்டுக் கட்டப்பட்ட செய்தியாகும் என அறிஞர் ஸகானி அவர்கள் கூறுகிறார்கள்

(அல்மஸனூஃ, பாகம்: 1, பக்கம்: 150, ஹதீஸ் எண்: 255)

இந்தச் செய்தி அறிவிப்பாளர்களின் தர வரிசையின் அடிப்படையில் இட்டுக்கட்டப்பட்டது என்பதோடு மட்டுமல்லாமல் அல்லாஹ்வுடைய வசனங்களுக்கும் எதிரானதாகும்.

நபி (ஸல்) அவர்களைப் படைத்திருப்பதினால் தான் வானம், பூமிகளைப் படைத்திருப்பதாக அல்லாஹ் எங்கும் கூறவேயில்லை. மாறாக, தான் ஒருவன் தான் வணக்கத்திற்குத் தகுதியான கடவுள் என்ற ஏகத்துவக் கொள்கையை நிரூபிப்பதற்காகத்தான் அல்லாஹ் அவற்றைப் படைத்திருப்பதாகக் கூறுகிறான்.

உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.

(அல் குர்ஆன் 2:163, 164)

சந்திரனையும் சூரியனையும் அல்லாஹ் எதற்காகப் படைத்தான் என்பதைப் பற்றி பின்வரும் வசனத்தில் தெளிவாகக் கூறுகிறான்.

ஆண்டுகளின் எண்ணிக்கை யையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகிற சமுதாயத் திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.

(அல்குர்ஆன் 10:5)

இப்புவியில் உள்ள அனைத்துப் பொருட்களும் யாருக்காகப் படைக்கப் பட்டவை என்பதைப் பற்றி அல்லாஹ் தன்னுடைய திருமறையில் பின் வருமாறு தெளிவுபடுத்துகின்றான் .

அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை (படைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (அல் குர்ஆன் 2:29)

எந்த ஒரு வசனத்திலும் அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களைப் படைத்திருப்பதினால் தான் இவற்றையெல்லாம் படைத்தேன் என்று கூறவில்லை, மாறாக ஒவ்வொன்றையும் படைத்ததற்குரிய காரணங்களை அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றான்,

மேலும் அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்களைப் படைத்திருக்க வில்லையென்றால் ஆதம் (அலை) அவர்களையும், மனித சமுதாயத்தை யும் படைத்திருக்க மாட்டான் என்பதை நாம் ஏற்றுக் கொண்டோமெனில் உண்மையாளனாகிய இறைவனுடைய சொல்லை நாம் மறுத்தவர்களாகி விடுவோம்.

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை.

(அல்குர்ஆன் 51:56)

இவ்வசனத்தில் அல்லாஹ் தன்னை வணங்குவதற்காகத் தான் மனித இனத்தையும் ஜின் இனத்தையும் படைத்ததாகக் கூறுகிறான்.

மேலும் சிலர் இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களால் கூறப்படாத இட்டுக்கட்டப் பட்ட செய்தி என்றாலும் அதனுடைய பொருள் சரியானது தான் என்ற ஒரு தவறான கருத்தை முன் வைக்கின்றனர். இவர்களுக்குச் சிறிதும் கூட மார்க்க அறிவு இல்லை என்பதைத் தான் இது படம் பிடித்துக் காட்டுகிறது.

இந்தக் கட்டுக்கதை திருமறை வசனங்களுக்கு எதிராக இருப்பதோடு மட்டுமல்லாமல் இன்னும் பல ஈமானிய அடிப்படைகளுக்கும் வேட்டு வைக்கிறது. நாம் நபிமார்களுக்கு மத்தியில் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் கூறியதைத் தவிர வேறு எந்த ஏற்றத் தாழ்வுகளையும் நாமாகக் கற்பிக்கக் கூடாது.

அவனுடைய தூதர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்டமாட்டோம் என நம்பிக்கை கொண்டோர் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன் 2:285 )

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மத்தாவுடைய மகன் யூனுஸ் (அலை) அவர்களை விடச் சிறந்தவன் என (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி (3413)

மவ்லிதில் ஆதாரமாகக் காட்டப் பட்டிருக்கின்ற இந்த கட்டுக்கதை நபி (ஸல்) அவர்களை உயர்த்தியும் ஆதம் (அலை) அவர்களை தாழ்த்தியும் வருகின்றது. எனவே பொருள் அடிப்படையில் கூட இதனை சரி காண்பதென்பது ஒரு இறை நம்பிக்கையாளனக்குரிய பண்பல்ல.

என் மீது யார் வேண்டுமென்றே பொய் கூறுகின்றாரோ அவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

(புகாரி 1291)

எனவே திருமறைக் குர்ஆனின் வசனங்களுக்கு எதிராகவும், நபி (ஸல்) அவர்களுடைய ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களுக்கும் மாற்றமாகவும் உள்ள இத்தகைய கட்டுக்கதைகளை தூக்கியெறிவது தான் நம்முடைய ஈமானுக்குப் பாதுகாப்பானதாகும்.


EGATHUVAM APR 2005