Mar 27, 2017

வஸீலா ஒரு விளக்கம்

வஸீலா ஒரு விளக்கம்

அப்துந் நாஸிர் எம்.ஐ.எஸ்.சி

ரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் நம் சமுதாயப் பெருமக்களால் பூப்பந்தலிட்டு, புதுப்பாய்கள் விரித்து நடுவில் தலையணைகளை வைத்து பயபக்தியோடு ஓதப்படும் ஒரு புராணம் தான் மௌலூது ஆகும்.

இதனுடைய பயங்கரத்தை சமுதாயம் அறியவில்லை. அரபியில் இருப்பதால் பொருள் தெரியாமல் ஓதி அதல பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மௌலூது புராணத்தை இயற்றிய கவிஞனால் தனது இணை வைப்பு வரிகளுக்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட செய்திகளில் ஒன்று தான் ஆதம் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பொருட்டால் "வஸீலா'' தேடினார்கள் என்ற செய்தியாகும்.

(இச்செய்தி உலகம் பிறந்தது எதற்காக? என்ற  கட்டுரையில் முழுமையாக கூறப்பட்டுள்ளது. அதனுடைய அறிவிப்பாளர்கள் தொடர்பான விவரங்களும் கூறப்பட்டுள்ளது.)

இது நபி (ஸல்) அவர்களால் கூறப்படாத அவர்களின் பெயரால் அவர்களின் மீதே இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இதில் நாம் இரண்டு விஷயங்களைப் ஆய்வு செய்ய வேண்டும்.

1. ஆதம் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பொருட்டால் "வஸீலா'' தேடினார்களா? என்பது.

2. "வஸீலா'' என்றால் என்ன? நபியையோ அல்லது மகான்களையோ இடைத் தரகராகக் கொண்டு "வஸீலா'' தேடுவது கூடுமா?

ஆதம் (அலை) அவர்கள் தான் செய்த தவறுக்காக, இறைவன் தனக்கு பாவமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்களின் பொருட்டால் பாவமன்னிப்பு தேடினார்கள் என்பது திருமறைக் குர்ஆனுக்கு எதிரான செய்தியாகும்.

ஏனென்றால் ஆதம் (அலை) அவர்கள் எவ்வாறு பாவமன்னிப்பு தேடினார்கள் என்பதை அல்லாஹ் தன் திருமறையில் தெளிவாகச் சொல்லுகிறான்.

(பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 2:37)

இறைவன் கற்றுக்கொடுத்த வார்த்தைகள் மூலமாகத் தான் ஆதம் (அலை) அவர்கள் பாவமன்னிப்புத் தேடினார்கள் என அல்லாஹ்வே சொல்லுகிறான். தான் கற்றுக்கொடுத்த அந்த வார்த்தைகள் என்ன என்பதை மற்றொரு வசனத்தில் அல்லாஹ்வே தெளிவுபடுத்துகிறான்.

"எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர்.

(அல்குர்ஆன் 7:23)

ஆதம் (அலை) அவர்கள் எவ்வாறு பாவமன்னிப்பு தேடினார்கள் என்பதை அல்லாஹ் தெளிவு படுத்தி விட்டான். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொருட்டால் ஆதம் (அலை) அவர்கள் பாவமன்னிப்புத் தேடினார்கள் என்பது கட்டுக்கதை, திருமறைக்குர்ஆனுக்கு எதிரானது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்..

"வஸீலா'' என்றால் என்ன?

"எதன் மூலம் மற்றொன்றின் பக்கம் நெருக்கமாக்கிக் கொள்ளப்படுமோ அதற்கு அரபியில் "வஸீலா'' என்று கூறப்படும்'' அதாவது தமிழில் "துணை சாதனம்'' என்று கூறலாம். கடலில் பயணம் செய்வதற்கு கப்பல் "வஸீலா''வாக அதாவது துணை சாதனமாக உள்ளது என்று கூறுவர்.

மகான்களை இடைத்தரகராகக் கொண்டு "வஸீலா'' தேடுவது கூடுமா?

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு "வஸீலா''வைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன் 5:35)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் அவனை நோக்கி ஒரு "வஸீலா''வை தேடிக்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறான்.

நாம் நல்வழியில் நடக்கத் தேவையில்லை, எந்த நல்லறமும் செய்யத் தேவையில்லை, எந்தத் தீமையிலிருந்தும் விலகத் தேவையில்லை, ஏதாவது ஒரு மகானை பிடித்துக் கொண்டால் போதும் கடவுளை நெருங்கி விடலாம் என்ற நம்பிக்கை உலகில் உள்ள பல மதங்களில் இருக்கிறது.

ஆனால் இஸ்லாம் இந்த நம்பிக்கையை நிராகரிக்கின்றது. இறைவனை நெருங்க நினைப்பவர்கள் நல்லறங்கள் எனும் "வஸீலா'' என்ற துணை சாதனத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று தான் நபி (ஸல்) கற்றுத் தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தனது நேசத்திற்குரிய மனைவியாகிய ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஒரு துஆவை கற்றுக் கொடுக்கிறார்கள். அதில் "அல்லாஹ்வே, நான் உன்னிடத்தில் சொர்க்கத்தையும், அதன் பக்கம் என்னை நெருக்கமாக்கி வைக்கக் கூடிய நல்லறங்களையும், நல்ல வார்த்தைகளையும் கேட்கிறேன்'' என கேட்குமாறு சொல்லிக் கொடுக்கிறார்கள்.

(நூல்: அஹ்மது 23870)

நாம் செய்யக் கூடிய நல்லறங்களும், நல்ல வார்த்தைகளும் தான் நம்மை சுவர்க்கத்தின் பக்கம் அதாவது இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக் கூடியவை ஆகும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய நேசத்திற்குரிய மனைவி ஆயிஷா  (ரலி) அவர்களுக்கு அவற்றை அல்லாஹ்விடம் கேட்குமாறு கற்றுக் கொடுக்கிறார்கள்.

இறைவனின் பக்கம் நெருங்கு வதற்கு, தன்னை "வஸீலா''வாக எடுத்துக் கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் கூறவேயில்லை. அப்படியிருக்க வேண்டுமென்றால் தன்னுடைய பாசத்திற்குரிய மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கும் கூட சொல்லிக் கொடுக்கவில்லை.

திருமறைக் குர்ஆனில் அல்லாஹ், நல்லறங்களின் மூலமாகத் தான் தன்னிடத்தில் உதவி தேட வேண்டும் என்று கற்றுத் தருகிறான்.

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.

(அல்குர்ஆன் 2:45)

பல்வேறு ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக் கூடியதாக நல்லறங்களைத் தான் கூறியிருக்கிறாôகள். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

1. குகைக்குள் மூன்று நபர்கள் சிக்கிக் கொண்ட போது அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் செய்த நல்லறங்களின் மூலமாகத் தான் இறைவனுடைய உதவியைக் கோரு கின்றார்கள்.

(பார்க்க புகாரி 2272)

2. ஜும்ஆத் தொழுகைக்கு வருபவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும் போது, முதல் நேரத்தில் வருபவர் ஒட்டகத்தை நெருக்கமாக்கியவர் போன்றவராவார். இரண்டாவது நேரத்தில் வருபவர் மாட்டையும் மூன்றாவது நேரத்தில் வருபவர் கொம்புள்ள ஆட்டையும் நான்காவது நேரத்தில் வருபவர் கோழியையும் ஐந்தாவது நேரத்தில் வருபவர் முட்டையையும் நெருக்கமாக்கியவர் போன்றவராவார் என்று கூறியுள்ளார்கள்.

(பார்க்க புகாரி 881)

அதாவது ஒட்டகம், மாடு, ஆடு, கோழி, முட்டை இவற்றைத் தர்மம் செய்து அதன் மூலம் இறை நெருக்கத்தைத் தேடியவர் போன்றவராவார்.

இந்த செய்தியிலும் தர்மம் செய்தல், ஜும்ஆவிற்கு வருதல் போன்ற நல்லறங்கள் தான் இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக்கூடிய காரியங்களாக கூறப்படுகிறது.

3. இரவு நேரங்களில் நின்று தொழுவது அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக் கூடியதாகும்.

(திர்மிதி 3472)

மேற்கண்ட ஹதீஸிலும் நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை என்ற நல்லறத்தை இறை நெருக்கத்திற்குரிய செயலாகக் கூறுகிறார்கள். நல்லறங்கள் தான் இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக்கூடிய "வஸீலா'' துணை சாதனம் என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

நபி (ஸல்) அவர்களின் பொருட்டாலும் மகான்களின் பொருட்டாலும் இறைவனிடம் "வஸீலா'' தேடலாம் என்று கூறுபவர்கள்,

"இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பக்கம் ஒரு "வஸீலா''வைத் தேடிக்கொள்ளுங்கள்''

(அல்குர்ஆன் 5:35)

என்ற வசனத்தை ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.

இடைத் தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நேர் மாறாக விளங்கிக் கொள்கிறார்கள்.

"வஸீலா''வுக்கு மகான்கள், இடைத் தரகர்கள் என்ற அர்த்தம் கிடையாது.

இவ்வசனத்தின் துவக்கத்தில் நம்பிக்கையாளர்களே! என்று அழைக்கப்படுகிறது. இந்த அழைப்பில் மகான்கள் என்று கருதப்படுவோரும் அடங்குவார்கள். "மகான்களும் "வஸீலா' தேட வேண்டும்'' என்பது தான் இவ்வசனத்தின் பொருள்.

நம்பிக்கையாளர்களே என்ற அழைப்பில் முதலில் அடங்கக் கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். அவர்களுக்கும் "வஸீலா'' தேடும் கட்டளை உள்ளது.

இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள் உள்ளன.

1.            இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!

2.            அல்லாஹ்வின் பக்கம் ஒரு "வஸீலா''வைத் தேடிக் கொள்ளுங்கள்.

3.            அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்.

இறைவனை அஞ்சுவதும் அறப்போர் செய்வதும் எப்படி நபி (ஸல்) அவர்களுக்கும் கடமையோ அதைப் போன்று தான் அல்லாஹ்வின் பக்கம் ஒரு "வஸீலா''வைத் தேடிக் கொள்வதும் அவர்கள் மீது கடமையாகும்.

எனவே, நபி (ஸல்) அவர்கள் "வஸீலா'' தேடுவதற்கு எந்த மகானைப் பிடிப்பார்கள்? என்று சிந்தித்தால் இப்படி உளற மாட்டார்கள்.

மகான்கள் கூட "வஸீலா'' தேடுகிறார்கள் என்று பின் வரும் வசனம் தெளிவாகவே கூறுகிறது.

இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமான வர்களே தமது இறைவனை நோக்கி "வஸீலா''வைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின் றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டிய தாகும்.

(திருக்குர்ஆன் 17:57)

மகான்களே அல்லாஹ்விடம் நெருக்கத்திற்காக "வஸீலா''வைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் எனும் போது அவர்களை "வஸீலா''வாகக் கொள்ளலாம் என்பது முட்டாள் தனமாகும். தன்னுடைய வயிற்றுக்கே சோறு இல்லாதவனிடம் எனக்கு பிச்சை போடு என்று கேட்பது போன்றதாகும்.

இறந்து விட்ட நல்லடியார்களின் பொருட்டால் "வஸீலா'' தேடலாம் என்று கூறுபவர்கள் அதற்குச் சான்றாக பின்வரும் ஹதீஸை முன் வைக்கின்றார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மக்களுக்குப் பஞ்சம் ஏற்படும் போது உமர் (ரலி), அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலம் (அல்லாஹ்விடம்) மழை வேண்டுபவர்களாக இருந்தனர். இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ எங்களுக்கு மழை வழங்கினாய் (இப்போது) எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக! என்று உமர் (ரலி) கூறுவார்கள். அவர்களுக்கு மழை பொழியும்.

நூல்: புகாரி 1010, 3710

இந்த ஹதீஸில் இறந்து போன நல்லடியார்களையோ அல்லது மகான்களையோ "வஸீலா''வாகக் கொள்ளலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, இது அவர்களுக்கு எதிரான சான்றாகும்.

அதாவது, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர். எனவே தான், அவர்களுடைய காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது அவர்கள் முன்னின்று பிரார்த்தனை செய்துள்ளார்கள். மேலும், அவர்கள் தான் அதற்கு மிகவும் தகுதியானவர்கள் ஆவார்கள்.

அவர்கள் மரணித்த பின் ஸஹாபாக்கள் யாரும் நபி (ஸல்) அவர்களை "வஸீலா''வாகக் கொள்ளவில்லை. இதிலிருந்தே இறந்துவிட்டவர்கள் நல்லடியார்களாக இருந்தாலும் அவர்களை "வஸீலா''வாகக் கொள்ளக் கூடாது என்பதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்த பின் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது அன்றைய ஆட்சித் தலைவராக இருந்த உமர் (ரலி) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களை முன்னிறுத்தி இறைவனிடம் மழைக்காகப் பிரார்த்திக்கிறார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.

அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய குடும்பத்தினராக இருந்ததால் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய குடும்பத் தினருடைய விஷயத்தில் தனக்கு இருந்த மரியாதையின் காரணமாக அவர்களை முன்னிறுத்தி இருக்கலாம்.

சிறந்தவர்கள் என்ற அடிப்படையில் பார்த்தோம் என்றால் அப்பாஸ் (ரலி) அவர்களை விட உமர் (ரலி) அவர்கள் தான் சிறந்தவர்களாவார். ஆனால், உமர் (ரலி) அவர்கள் முன்னிறுத்தப் படவில்லை.

இதிலிருந்தே மகான்களை "வஸீலா''வாகக் கொள்ளலாம் என்ற வாதம் தவிடு பொடியாகிறது. உமர் (ரலி) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களை முன்னிறுத்தியது அவர்களுடைய பணிவைக் காட்டுகிறது.

உமர் (ரலி) சிறந்தவராக இருந்தும் அப்பாஸ் (ரலி) அவர்களை முன்னிறுத்தியதைப் போன்று, இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுபவர்கள் சாதாரண ஒரு மனிதரை முன்னிறுத்துவார்களா?

இறந்தவர்களையோ மகான் களையோ "வஸீலா''வாகக் கொள்ளலாம் என்பதற்கும் இந்த செய்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை இதிலிருந்தே நாம் விளங்கிக் கொள்ளலாம்.

எனவே, நல்லறங்களைத் தான் நாம் இறைவனை நெருங்குவதற்குரிய "வஸீலா''வாகக் கொள்ள வேண்டும். இதுவே தெளிவான நபிவழியாகும்.

EGATHUVAM APR 2005