Mar 25, 2017

மஞ்சள் மகிமையா?

மஞ்சள் மகிமையா?

கே.எம். அப்துந் நாஸிர் எம்.ஐ. எஸ்.சி

சில வாரங்களுக்கு முன்னால் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட ஜவுளிக் கடைகளில் ஒரு வித்தியாசமான புதிய மாற்றம் காணப்பட்டது. பற்பல வண்ணச் சேலைகள் புதுப்புது டிசைன்களில் குவிந்து காணப்படும் ஜவுளிக் கடைகளில் மஞ்சள் நிறச் சேலைகள் குவிந்து காணப்பட்டன. மஞ்சள் நிறச் சேலைகளை வாங்குவதற்கு ஆண்களும் பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு சென்றனர். இதற்கு நம்முடைய இஸ்லாமியப் பெண்மணிகளும் விதி விலக்கல்ல.

என்ன இது? வித்தியாசமாக இருக்கின்றதே! புதுப்புது டிசைன்களை விரும்பி வாங்கும் பெண்கள் மஞ்சள் சேலைகளை விரும்பி வாங்குகிறார்களே நம்முடைய இஸ்லாமியப் பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு செல்கின்றனரே! என நாம் ஆச்சரியப்பட்டு விசாரித்த போது தான் ஒரு உண்மையான இறை நம்பிக்கையாளனுக்குக் கோபத்தை ஏற்படுத்தக் கூடிய அந்தச் செய்தி நம்மை எட்டியது.

அதாவது மஞ்சள் நிறச் சேலைகளை மக்கள் போட்டி போட்டு வாங்கக் காரணம் ஒரு ஜோசியனின் அறிவிப்பு தான். அதாவது,

"நவக்கிரகங்களில் ராகு, கேது மிகவும் சக்தி வாய்ந்தது. மனிதர்களுக்கு சுக வாழ்வு கொடுக்கக் கூடியது. இன்ப, துன்பங்களைத் தருவதும் இந்த ராகு, கேதுகளே!

இந்த ஆண்டு ராகு, கேது நேர்க்கோட்டில் வருகிறதாம். இது சகோதரிகளுக்கு உதவாத சகோதரனுக்கு உகந்தது அல்ல. எனவே, இதற்குப் பகரமாக ஆண்கள் தங்களுடைய சகோதரிகளுக்கு மஞ்சள் சேலை, சட்டை, மஞ்சள் கயிறு போன்றவை வாங்கிக் கொடுத்து அவரிடம் கொடுத்து ஆசி பெற்று மஞ்சள் வாங்கி பூசினால் தான் நல்லது.''
(தினத் தந்தி
மதுரைப் பதிப்பு 15.02.2005)

யாரோ சில ஜவுளித் தயாரிப்பாளர்கள் தேங்கிக் கிடக்கும் சேலைகளை விற்பனை செய்வதற்காக ஜோதிடம் என்ற போர்வையில் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றிப் பணம் பார்த்து வருகின்றனர்.

இது போன்ற மூடநம்பிக்கைகளில், இறைவனுக்கு இணை வைக்கும் காரியங்களில் நம்முடைய சமுதாயத் தவர்களும் பலியாகி விட்டதை அறிந்த போது தான் நமக்கு மிகவும் கவலை ஏற்பட்டது. இந்த ஜோதிடத்தைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நம்மில் பெரும்பாலானவர்கள் அறியாமல் தான் இருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தைக் கணித்துச் சொல்பவனிடத்தில் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வேதத்தை (குர்ஆனை) நிராகரித்து விட்டான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அஹ்மத் (9171)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

அறிவிப்பளார் : ஸஃபிய்யா (ரலி), நூல் : முஸ்லிம் (4137)

ஜோதிடத்தை நம்புவது என்பது இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக் கூடிய ஒரு காரியம் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

மஞ்சளுக்கு மகிமையா?
இப்பிரபஞ்சத்தில் அல்லாஹ் பலதரப்பட்ட நிறங்களைப் படைத்துள்ளான். பூத்துக் குலுங்கும் மலர்களிலும், கனிந்து தொங்கும் பழங்களிலும், மரங்கள், செடிகள்,கொடிகள், வானம், பூமி, கடல், பலதரப்பட்ட உயிரினங்கள், மனிதர்கள் ஆகிய அனைத்தையும் இறைவன் பல்வேறு நிறங்களில் படைத்துள்ளான்.

இதனைச் சிந்திக்கக் கூடியவர்கள் இதனைப் படைத்த இறைவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதை உணர்ந்து அவனுக்குக் கட்டுப்பட்டு வாழக்கூடிய மக்களாக ஆவதற்கு தன்னுடைய அத்தாட்சிகளாக இறைவன் பலதரப்பட்ட நிறங்களை உருவாக்கியுள்ளான்.

அல்லாஹ்வே வானத்திலிருந்து தண்ணீரை இறக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அதன் மூலம் மாறுபட்ட நிறங்களைக் கொண்ட கனிகளை வெளியாக்கினோம். மலைகளில் வெண்மையும், சிவப்பும் மாறுபட்ட நிறங்களைக் கொண்டதுமான பாறைகள் உள்ளன. கருப்பு நிறமுடைய வைகளும் உள்ளன.

இவ்வாறே மனிதர்கள், ஊர்வன மற்றும் கால்நடைகளில் மாறுபட்ட நிறங்களைக் கொண்டவை உள்ளன. அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்பவன்.
(அல் குர்ஆன் 35 : 27, 28)

பூமியில் அவன் உங்களுக்காகப் படைத்தவை மாறுபட்ட பல நிறங்களைக் கொண்டுள்ளன. படிப்பினை பெறும் சமுதாயத்துக்கு இதில் சான்று உள்ளது.
(அல் குர்ஆன் 16 : 13)

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல் குர்ஆன் 30 : 22)
அனைத்து நிறங்களும் இறைவனின் அத்தாட்சிகள் என்பதைத் தான் மேற்கண்ட இறை வசனங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

இஸ்லாம் எந்த ஒரு நிறத்திற்கும் நம்முடைய வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுத்தவும் தீமைகளை நன்மைகளாக மாற்றும் மகிமையும் இருப்பதாகக் குறிப்பிடவில்லை. மஞ்சளை மகிமை என்று நினைப் பவர்கள் மஞ்சள் காமாலை நோயை மகிமை என்று நினைப்பார்களா? அதுவும் மஞ்சள் நிறந்தானே!

மஞ்சள் நிறச் சேலைகளை சகோதரிக்கு வாங்கிக் கொடுத்தால் தான் சகோதரனுக்கு வாழ்வில் பாதுகாப்பு ஏற்படும் என அல்லாஹ்வை நம்பும் ஈமான் கொண்ட ஒருவன் நம்பினான் என்றால் அவன் இஸ்லாத்தை விட்டே வெளியேறி விட்டான்.

ஏனெனில் நமக்கு வாழ்வில் ஏற்படக்கூடிய அணுவளவு இன்பமாக இருந்தாலும் துன்பமாக இருந்தாலும் அது அல்லாஹ்வின் மூலமாகத் தான் ஏற்படுகிறது என்று நம்பிக்கை வைப்பவன் தான் உண்மை முஃமின் ஆவான்.

அல்லாஹ் நாடினாலே தவிர யாரும் நமக்கு எந்த நன்மையையும் எந்தக் கெடுதியையும் செய்யமுடியாது என்றும் ஒரு இறை நம்பிக்கையாளன் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:

"அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக!
(அல் குர்ஆன் 9 : 51)

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உனக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
 (அல் குர்ஆன் 10 : 107)

"வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் "அல்லாஹ்'' என்று கூறுவார்கள். "அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!'' என்று கேட்பீராக! "அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்'' என்று கூறுவீராக!
 (அல் குர்ஆன் 39 : 38)
எல்லா நிலைகளிலும் நாம் அல்லாஹ் ஒருவன் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து அவன் ஒருவனை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும்.

மஞ்சள் நிறச் சேலையை வாங்கி அன்பளிப்புச் செய்து விட்டால் நம் எதிர்கால வாழ்க்கை சீராக அமையும் என நம்பிக்கை வைப்பதில் மற்றொரு இணைவைப்புக் காரியமும் அடங்கியிருக்கிறது.

நாளை நமக்கு என்ன ஏற்படும்? ஏன், அடுத்த வினாடி நமக்கு என்ன ஏற்படும் என்பதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே! அவனைத் தவிர மற்ற எவராலும் மறைவானவற்றை ஒரு போதும் அறிய முடியாது என்றும் ஒரு முஃமின் உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.

ஒருவன் ஜோதிடர்களாலோ, பால் கிதாப் பேர்வழிகளாலோ நாளை நடப்பதை அறிய முடியும் என்று நம்பிக்கை வைத்தால் அவனும் இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியேறியவன் தான்.

அல்லாஹ் கூறுகிறான்:

தான், நாளை சம்பாதிக்க வுள்ளதை எவரும் அறிய மாட்டார்.
(அல் குர்ஆன் 31 : 34)

வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!
 (அல் குர்ஆன் 27 : 65)

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலிலும் உள்ள வற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதை யானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.
 (அல் குர்ஆன் 6 : 59)

நாளை நடப்பதை அறிபவன்  அல்லாஹ் ஒருவன்தான் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

வெள்ளை ஆடை அணிதல்
கஷ்டங்களை நீக்கும், நல்லவை நடக்கும் வாழ்வில் சுபிட்சத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் எந்த ஒரு ஆடைக்கும் இஸ்லாம் முக்கியத்துவம் வழங்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் சிவப்பு (புகாரி 3551), கருப்பு (முஸ்லிம் 2418), பச்சை (நஸயீ (1554)) போன்ற பல்வேறு நிறங்களில் ஆடை அணிந்துள்ளார்கள்.

மஞ்சள் நிற ஆடை ஒருவருக்கு அழகாக இருந்தது. அதை நபியவர்கள் பாராட்டியுள்ளார்கள்.
(பார்க்க புகாரீ 3071, 5823)

ஒருவன் தான் விரும்பிய நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் வெள்ளை அணிவதை ஆர்வமூட்டியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் வெள்ளை ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். இது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். இன்னும் உங்களில் மரணமடைந்தவர்களுக்கும் வெள்ளையிலேயே கஃபனிடுங்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : திர்மிதி (915)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு வெள்ளை ஆடைகளைப் பற்றி வலியுறுத்துகிறேன். உங்களில் உயிருள்ளவர்கள் அதை அணியட்டும். மரணம் அடைந்தவர்களை அதில் கஃனிடுங்கள். அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும்.
அறிவிப்பவர் : ஸமூரா (ரலி)
நூல் : திர்மிதி (5228)

நபி (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடையை அதை அணிவதால் மகிமை ஏற்படும் என்ற அடிப்படையில் வலியுறுத்தவில்லை. அதற்குரிய காரணத்தையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளை ஆடையை அணியுங்கள். ஏனென்றால்,அது மிகத் தூய்மையானது. மணமிக்கது. அதிலேயே உங்களில் மரணித்தவர்களுக்கும் கஃபனிடுங்கள்.
அறிவிப்பவர் : ஸமூரா (ரலி), நூல் : திர்மிதி (2734)

நாம் நிறமுள்ள ஆடைகளை அணியும் போது அதில் அழுக்குப் படிந்தாலோ கறைகள் ஏற்பட்டாலோ வெளியே தெரியாது. ஆனால், வெள்ளை ஆடை அப்படிப்பட்டதல்ல. அதில் சிறிதளவு அழுக்குப் படிந்தாலும் வெளியே தெரியும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் தூய்மையை வலியுறுத்தி வெள்ளை ஆடை அணியும்படி கூறியுள்ளார்கள்.

காவி ஆடை அணிவது கூடாது
நபி (ஸல்) அவர்கள் காவி நிறமுள்ள ஆடைகளை அணிவதைத் தடை செய்துள்ளார்கள். காவி ஆடை அணிவதால் நமக்குத் துன்பங்கள் ஏற்படும் என்ற அடிப்படையில் அல்ல.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் என் மீது இரண்டு காவி நிற ஆடைகளைப் பார்த்தார்கள். அப்போது அவர்கள் இது இறை மறுப்பாளர்களின் ஆடையாகும். இதை அணியாதே! என்று கூறினார்கள்.
நூல் : புகாரீ (3872)

நபி (ஸல்) அவர்கள் காவி ஆடை அணிவதை ஏன் தடை செய்தார்கள் என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகிறது.

ராசி, பலன் பார்ப்பவர்கள் காஃபிர்களே!
ராகு, கேது ஆகிய கிரகங்கள் நேர்க்கோட்டில் வருவதால் சகோதரிக்கு உதவாத சகோதரனுக்கு கேடு தான் என்பதை ஒருவன் நம்பினால் அவன் இறை மறுப்பாளன் தான். சகோதரர்கள் சகோதரிகளுக்கு உதவி செய்யக் கூடாது என நாம் கூறவில்லை. எல்லோரும் உறவினர்களுக்கு உதவி, ஒத்தாசைகள் புரிந்து தான் வாழ வேண்டும். அதைத் தான் இஸ்லாமும் வலியுறுத்துகிறது.

ஆனால், நட்சத்திரங்கள் இவ்வாறு வருவதால் தான் இது நடக்கின்றது என நம்பிக்கை வைப்பது இறைவனின் அருளை மறுப்பது ஆகும். இறை நிராகரிப்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் உங்கள் இறைவன் கூறியதை நீங்கள் சிந்திக்கவில்லையா? எனக் கேட்டுவிட்டு (பின்வருமாறு கூறினார்கள்)

உங்கள் இறைவன் கூறினான்: நான் என்னுடைய அடியார்களுக்கு எந்த ஒரு அருள் புரிந்தாலும் அவர்களில் ஒரு சாரார் அதன் மூலம் காஃபிர்களாக ஆகிவிடுகிறார்கள். (எந்த ஒரு காரியம் ஏற்பட்டாலும்) இந்த நட்சத்திரம் அல்லது இந்த நட்சத்திரத்தின் காரணத்தினால் தான் (இது நடந்தது) என அவர்கள் கூறுகின்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (105)

புகாரியில் 846 வது செய்தியும் இதே கருத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே, இது போன்ற நட்சத்திர ராசி பலன்களை நம்புவது, மஞ்கள் நிற சேலையால் துன்பங்கள் நீங்கிவிடும் என நம்பிக்கை வைப்பது போன்ற இணைவைப்புக் காரியங்களை விட்டும் நாம் விலகிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ், அவனுக்கு இணை வைக்காத நன் மக்களாக வாழ்ந்து மரணிக்கக் கூடியவர்களாக நாம் அனைவரையும் ஆக்கியருள் புரிவானாக!


EGATHUVAM MAR 2005