Mar 23, 2017

சட்டத்தின் முன் அனைவரும் சமம்

சட்டத்தின் முன் அனைவரும் சமம்

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கை நியதி சங்பரிவார்களைத் தவிர எல்லா அரசியல் தலைவர்களின் வாய்களிலும் வலம் வந்து கொண்டிருக்கின்றது. பத்திரிகைகளும் தங்கள் பக்கங்களில் இந்த நியதியை திரும்பத் திரும்ப வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதியிலிருந்து இந்நாட்டின் கடைநிலை நீதிமன்ற நீதிபதிகள் வரை வந்து சாஷ்டாங்கம் செய்து மகிழ்ச்சி காணும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற சுப்ரமணியன் கைது செய்யப்பட்டது தான்.

சங்கராச்சாரி கைது ஏன்? என்று தலைப்பிட்டு புலனாய்வு இதழ்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் வார, மாத இதழ்கள் ஆளுக்கொரு பக்கம் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றன. இதில் உண்மையை எழுதும் பத்திரிகைகளும் உள்ளன. அரசியல்வாதிகள் இந்தக் கைதுக்குப் பல பின்னணிகளைப் பின்னி விடுகின்றனர். கைதுக்குக் காரணமாக பல உள்நோக்கங்களையும் உண்மைக்குப் புறம்பான ஊகங்களையும் உதிர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழலில் "மதவெறியாக்கப்படும் விவகாரங்கள்' என்று தலைப்பிட்டு ஹிந்து நாளேடு 22.11.04 அன்று தீட்டிய தலையங்கத்தில் தனது நடுநிலைப் பார்வையைப் பதிய வைத்திருந்தது. அந்தத் தலையங்கத்தின் சாரத்தை இங்கு சற்று பார்ப்பது சாலப் பொருத்தமாகும்.

ஆந்திர மாநிலத்தில் மஹபூப்நகரில் சங்கராச்சாரியை தமிழகக் காவல்துறை கைது செய்த நடவடிக்கை ஒரு தெளிவான செய்தியைப் பறை சாற்றுகின்றது. உயர் பதவியை வகிப்பவர்கள், அரசியல்வாதிகளானாலும் சரி! ஆன்மீகவாதிகளாலும் சரி! சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது என்பது தான் இந்தக் கைது நடவடிக்கை தரும் தெளிவான பாடமாகும். இதை உறுதி செய்யும் விதமாக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா, "காஞ்சி சங்கராச்சாரியைக் கைது செய்தால் பாராட்டுக்கள் கிடைக்கும் என்பதாலோ அல்லது கைது செய்யாவிட்டால் பழிச் சொற்கள் படையெடுத்து வரும் என்று பயந்தோ இந்த நடவடிக்கையில் இறங்கவில்லை. மாறாக சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே செயலாற்றியுள்ளோம்'' என்று கூறியுள்ளார்.

ஆனால் வழக்கு விசாரணைக்கு வரும் போது, தகுந்த ஆதாரம் இல்லாது போனால் அதற்காக ஜெயலலிதா பெரிய அரசியல் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதும் இங்கு கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

அதே நியதியை அடிப்படையாக வைத்து உயர்நீதி மன்றம், " கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சங்கராச்சாரியின் இந்த வழக்கில் தகுந்த முகாந்திரம் உள்ளது'' என்ற கூறி அவரது ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது. இந்தச் சிக்கலான கட்டத்தில் சங்பரிவார்களைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும், "எவரும் சட்டத்திற்கு மேற்பட்டவர் கிடையாது'' என்ற நிலைபாட்டைக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சம். ஆனால் சங்பரிவார்கள் மட்டும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை எதிர்த்தே நிற்கின்றனர்.

மத நம்பிக்கைகளில் அரசியல் சட்டம் தலையிடக்கூடாது என்பதே இவர்களின் கொள்கையாகும். அயோத்யா இயக்கத்தின் மதவெறியர்கள் இந்தக் கொள்கைப் பிரகடனத்தின் படி அன்று வெறியாட்டம் போட்டார்கள். அதே கொள்கையின் அடிப்படையில் இன்று சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரி கைது விவகாரத்தை மதவெறியாக்கும் முயற்சியை இவர்கள் மேற்கொண்டு, இப்போது மதவெறியாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் மதவெறிப் போக்கு நமக்கு உணர்த்தும் விஷயம் இந்த சங்பரிவார்கள் குறிப்பாக பி.ஜே.பி. இந்த நாட்டின் இறையாண்மையை - சட்டத்தின் ஆட்சியை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறுவது தான்.

ஹிந்து நாளேட்டின் இந்தத் தலையங்கத்தின் மிக முக்கியமானவை இரண்டு அம்சங்கள். முதலாவதாக, மையக் கருத்தாகத் தலை தூக்கி நிற்பது "சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்'' என்ற கொள்கை தான். இந்தத் தலையங்கம் இரண்டாவதாக கோடிட்டுக் காட்டுவது, அன்று பாபரி மஸ்ஜித் தகர்ப்பின் போதும், இன்று சங்கராச்சாரி கைதின் போதும் இந்நாட்டின் இறையாண்மைக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் சவாலாக நிற்பது சங்பரிவார்கள் தான் என்ற கருத்தாகும். இந்த அடிப்படையிலேயே இந்த விஷயத்தை ஏகத்துவம் இங்கு அணுகவுள்ளது.

சட்டத்தின் உயிர் மூச்சு

சட்டத்தின் உயிர் மூச்சே அதன் முன் அனைவரும் சமம் என்பது தான். சட்டத்தின் இந்த உயிர் மூச்சு பாதிக்கப்படுமானால் மனிதன் சட்டமில்லாத, காட்டுமிராண்டி காலத்திற்குச் சென்று விடுவான்.

மனிதர்கள் இயற்கையிலேயே சில வித்தியாசத்துடன் படைக்கப் பட்டிருக்கின்றார்கள். ஒருவன் பணக்காரன், மற்றொருவன் ஏழை! ஒருவன் பலசாலி, இன்னொருவன் பலவீனமானவன்! இதில் பணக்காரன் ஏழையின் மீது ஏறி மிதிக்கக் கூடாது. தனது பண பலத்தை, ஆள் பலத்தை வைத்து ஏழையின் மீது வரம்பு மீறி விடக் கூடாது. அதுபோல் பலத்தால் உயர்ந்தவன் பலவீனமானவன் மீது பாய்ந்து விடக் கூடாது என்பதற்காகவே உருவானது தான் சட்டம். இறைவனால் வழங்கப்பட்ட சட்டமாக இருந்தாலும் மக்கள் தங்களுக்கு மத்தியில் தாங்களே உருவாக்கிக் கொண்ட சட்டமாக இருந்தாலும் அதன் உயிர் மூச்சாக உள்ள, அனைவரும் சமம் என்ற கொள்கை நெறி தகர்க்கப்படாமல் காக்கப்பட வேண்டும். இல்லையேல் நீதி மன்றங்கள் தேவையில்லை. அதன் உத்தரவுகளை செயல்படுத்துகின்ற அரசாங்கமும் தேவையில்லை. பலமிக்க ஒரு மிருகம் பலவீனமான ஒரு மிருகத்தை அடித்துத் தின்னுகின்ற காட்டு வாழ்க்கையே வாழ்ந்து விட்டுப் போகலாம். அதனால் சட்டத்தின் உயிர் நாடி நின்று போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சங்கராச்சாரி கைது விவகாரத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை துணிச்சலாகக் கடைப்பிடித்த முதல்வர் ஜெயலலிதாவை நாம் திறந்த மனதுடன் பாராட்டுகின்றோம். அதே சமயம் முதல்வர் ஜெயலலிதா இதே அணுகுமுறையை பாபரி மஸ்ஜித் விஷயத்தில் இன்று வரை கடைப்பிடிக்காததற்கு நாம் கண்டணத்தைத் தெரிவிக்கவும் தவற மாட்டோம்.

இன்று ஜெயலலிதா கடைப்பிடித்த இதே அணுகுமுறையை அன்று மத்தியில் பிரதமராக இருந்த நரசிம்மராவ் கடைப்பிடிக்கவில்லை. பெரும்பான்மை சமுதாயத்தின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டு கிளம்பிய மிருகக் கூட்டம் சூலாயுதங்கள், கடப்பாரைக் கம்பிகளைத் தூக்கிக் கொண்டு வந்த போது சட்டத்தின் முன் பெரும்பான்மை, சிறுபான்மை அனைவரும் சமம் என்ற அடிப்படையில் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவில்லை. இந்த வம்பர்களின் கொட்டத்தை அடக்க முன்வரவில்லை. அன்று சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டிருந்தால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை உயிர் துடிப்புடன் செயல்படுத்தியிருந்தால், சங்பரிவாரக் கும்பல்களின் ஆட்டத்தை அடக்கியிருந்தால் குஜராத்தில் இனப் படுகொலை நடத்துகின்ற அளவுக்கு இவர்கள் துணிச்சலைப் பெற்றிருக்க மாட்டார்கள்.

சிறைவாசத்திற்குப் பதிலாக சிம்மாசனம்

ஒருவரது சொத்திற்கு இன்னொருவர் உரிமை கொண்டாடக் கூடாது, அந்தச் சொத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் அவரது சொத்தின் எல்லையில் அத்துமீறி நுழையக் கூடாது, அதையும் தாண்டி அவரது சொத்துக்குச் சேதம் விளைவிக்கக் கூடாது என்று சட்டத்தின் தடை உத்தரவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இத்தனை தடை உத்தரவுகளையும் மீறிய சங்பரிவார்கள் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்டு சிறைவாசம் அனுபவிப்பதற்குப் பதிலாக தேர்தல் களத்திலே நின்று சிம்மாசனத்தை அல்லவா அனுபவித்தார்கள். இன்னும் அனுபவிக்கத் துடிக்கின்றார்கள்.

சட்டத்தின் உயிர் மூச்சான, அனைவரும் சமம் என்ற கொள்கையின் குரல்வளையைப் பிடித்து நரசிம்மராவ் நெறித்ததற்குக் காரணம் பெரும்பான்மை வாக்கு வங்கியைப் பகைத்துக் கொண்டு நாற்காலியை இழந்து விடக் கூடாது என்பது தான். ஆனால் எல்லாம் வல்ல நாயன், அவர் போட்ட கணக்கை தப்புக் கணக்காக்கி இன்று வரை உத்தரபிரதேசத்தில் காங்கிரஸை இல்லாமல் ஆக்கி விட்டான். மத்தியிலும் இத்தனை ஆண்டு காலம் வர முடியாமல், இப்போது அதன் ஜென்ம விரோதியான கம்யூனிஸ்ட் மற்றும் மாநிலக் கட்சிகளின் தயவினால் ஆட்சிக்கு வந்துள்ளது. அல்லாஹ்வின் ஆலயத்தில் ஒரு கூட்டம் அத்துமீறிய போது, அதிகாரம் அனைத்தையும் தன் கையில் வைத்துக் கொண்டு வாய் பொத்தி மவுனமாக இருந்ததற்கு அவன் கொடுத்த தண்டனையும் நிந்தனையும் ஆகும்.

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று இன்று குரல் எழுப்பும் முதல்வர் ஜெயலலிதா, பாபரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன் ஒரு முதல்வர் என்ற முறையில் அன்று குரல் எழுப்பியிருந்தால் நிச்சயமாக பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டிருக்காது. இடித்த பின்பு குரல் உயர்த்தியிருந்தால் இந்த அக்கிரமக்காரர்கள் கைது செய்யப்படுவதற்கு அது துணையாக அமைந்திருக்கும். இப்போது கூட குரல் உயர்த்தினால் அது உரிய பலனை அளிக்காமல் இருக்காது. முதல்வர் இதைச் செய்வாரா? என்றால் நிச்சயமாக செய்ய மாட்டார். இதற்குக் காரணம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையில் அவரே பாகுபாடு காட்டுவது தான்.

இந்து நாளேடு தெரிவித்திருப்பது போல் இந்த நாட்டின் இறையாண்மைக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் சவாலாகத் திகழ்பவர்கள் சங்பரிவார்கள். திருடன் திருடி விட்டு, அதை மறைப்பதற்காக திருடன் திருடன் என்று கத்துவது போல், இந்த நாட்டின் இறையாண்மைக்கும் சட்டத்திற்கும் எதிராகச் செயல்பட்டு தேசத் துரோகம் செய்து கொண்டிருக்கும் இவர்கள் முஸ்லிம்களைப் பார்த்து தேச விரோதிகள் என்று கூச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு தேசபக்தி வேடம் போடும் இந்த நாசக் கும்பலைக் கைது செய்ய வேண்டும் என்று முதல்வர் குரல் எழுப்ப வேண்டும். அப்போது தான் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையின்படி முழுமையாக நடந்தவராவார்.

மத்திய அரசும் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மஸ்ஜிதை உடனே கட்டித் தர வேண்டும். இது முஸ்லிம்களின் சொத்து. சட்டம் இல்லாத நாட்டில் பறிக்கப்பட்டது போன்று இந்தச் சொத்து முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இந்தச் சொத்தை அப்படியே திருப்பிக் கொடுப்பதுடன் அதை இடிப்பதற்குக் காரணமானவர்கள் அத்தனை பேரும், அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் இங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கின்றது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நியதி கடைப்பிடிக்கப்படுவதாக அர்த்தம்.

எந்தச் சமூகத்தில் இந்த நியதி நிலைநாட்டப்படவில்லையோ அந்தச் சமூகம் நிச்சயமாக அழிந்து போகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கா வெற்றிப் போரின் போது, (மக்சூமி குலத்துப்) பெண்ணொருத்தி திருடி விட்டாள். ஆகவே அவளுடைய குலத்தார் (தண்டணைக்கு) அஞ்சி, அவளுக்காக பரிந்துரைக்கும்படி கோரி உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். உஸாமா (ரலி) அவர்கள் அவளுக்காக (பரிந்து) பேசிய போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. அவர்கள், "அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றைக் குறித்தா என்னிடம் (பரிந்து) பேசுகின்றாய்?'' என்று கேட்டார்கள். உடனே உஸாமா (ரலி), "எனக்காக பாவமன்னிப்பு கோரி பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் தூதரே'' என்று சொன்னார்கள்.

மாலை நேரம் வந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்றபடி போற்றிப் புகழ்ந்து விட்டுப் பிறகு, "நிற்க, உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள் தம்மிடையே உயர்ந்தவன் திருடி விடும் போது அவனைத் தண்டிக்காமல் விட்டு வந்ததும், பலவீனமானவன் திருடி விடும் போது அவனுக்குத் தண்டணை கொடுத்து வந்ததும் தான். முஹம்மதின் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீதாணையாக! முஹம்மதின் மகள் பாத்திமாவே திருடி விட்டிருந்தாலும் அவளது கையையும் நான் வெட்டியிருப்பேன்'' என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட அவ்வாறே அவளது கை வெட்டப்பட்டது. அதன் பிறகு அவள் அழகிய முறையில் பாவமன்னிப்பு கோரி விட்டாள். மேலும் மணம் புரிந்து கொண்டாள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 4304

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நியதி நிலைநாட்டப்படவில்லை என்றால் அந்தச் சமூகம் அழிந்து போகும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகில உலகத்திற்கும் தெரிவிக்கின்றார்கள். இந்த எச்சரிக்கை இறைச் சட்டத்திற்கென்று கூறப்பட்டிருந்தாலும் மனிதர்கள் தங்களுக்கிடையில் தீமைகளைத் தடுப்பதற்காக வகுத்துக் கொண்ட சட்டத்திற்கும் பொருந்தும்.

EGATHUVAM DEC 2004