Mar 23, 2017

முபாஹலா ஓர் உண்மை விளக்கம்

முபாஹலா ஓர் உண்மை விளக்கம்

முஸ்லிம்களுக்கிடையில் முபாஹலா செய்யலாமா? என்ற கேள்விக்கு ஏகத்துவம் ஜூலை 2004 இதழில் பதிலளித்திருந்தோம். இதை விமர்சித்து முபாஹலா ஓர் ஆய்வு என்று ஒரு பிரசுரம் வெளியாகியிருந்தது. அந்தப் பிரசுரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களையும், பொய்களையும், தனி நபர் தாக்குதலையும் தாங்கி, இனி பொய்யையே பிரச்சாரம் செய்வது என்பதைக் கொள்கையாகக் கொண்டோரின் பின்னணியை நன்றாகவே தெளிவுபடுத்தியிருந்தது.

சிறந்த மார்க்க அறிஞர்களின் கருத்து என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் அந்தப் பிரசுரத்தில் ஒரே கேள்விக்குள்ளே வரவேண்டிய ஒரு விஷயத்தை ஐந்தாகப் பிரித்து ஐந்து கேள்விகளாக வெளியிட்டு, தலைசிறந்த மார்க்க அறிஞர்களின் (?) அதிமேதாவித்தனத்தை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது.

இதுபோன்ற கருத்து வேறுபாடுகளுக்கு நேரடி விவாதம் தான் சரியான தீர்வு என்ற அடிப்படையில், ஏற்கனவே முபாஹலா தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும் போது இது தொடர்பாக நேரடி விவாதம் செய்யத் தயார் என்று உணர்வு பத்திரிகையில் மவ்லவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பிரசுரத்தை நாமும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் சில கொள்கைச் சகோதரர்கள் இந்தப் பிரசுரத்திலுள்ள பொய்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதால் இந்த விளக்கத்தை வெளியிடுகின்றோம்.

இவர்களே பட்டியலிட்டுக் காட்டியிருக்கும் நெல்லை ஜெபமணி, காதியானிகள், 19 குரூப் ஆகியோர் அசத்தியக் கொள்கையில் இருந்தாலும் தங்களுடைய கொள்கையில் அவர்களுக்கு இருந்த கொள்கைப் பிடிப்பு, நிறம் மாறாத நிலைபாட்டுத் தன்மை, நெஞ்சுரம் ஆகியவற்றின் காரணமாக அவர்கள் நேரடி விவாதத்திற்கு ஒப்புக் கொண்டு நம்மிடம் விவாதம் செய்தனர். அந்த உறுதி கூட இவர்களிடம் இல்லை என்பதை தங்களது பிரசுரம் வாயிலாக நிரூபித்துள்ளார்கள். இதை மக்களுக்கு மத்தியில் தெளிவு படுத்துவதற்காகவே இந்தப் பதிலை அளிக்கின்றோம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் முபாஹலாவுக்கு பி.ஜே. அழைத்தாராம். உடனே தமுமுக தலைவர்கள் முபாஹலாவுக்குத் தயாராகி, சிறந்த மார்க்க அறிஞர்களிடம் (?) இதுபற்றி வினவினார்களாம். அந்த சிறந்த அறிஞர்கள் மூன்று விஷயங்களின் அடிப்படையில் கூடாது என்று சொன்னார்களாம். அதனால் தான் முபாஹலாவுக்கு வரவில்லையாம். இப்படியாக ஒரு கதையை ஜோடித்து எழுதியுள்ளார்கள்.

இங்கு நம்மைப் புல்லரிக்க வைக்கும் விஷயம், தமுமுகவினர் எதைச் செய்தாலும் மார்க்க அடிப்படையில் தான் செய்கின்றார்கள் என்று சொல்வது தான். கட்டப் பஞ்சாயத்து, பொய் வழக்கு போடுவது, தஃவா பணியை முடக்குவது, சுன்னத் வல் ஜமாஅத்தினரிடம் (அவர்கள் இவர்களை ஏறெடுத்துப் பார்க்காத போதிலும்) தங்களை பக்கா சுன்னத் வல் ஜமாஅத் என்று காட்டிக் கொள்வது, அதற்காக கொள்கைவாதிகளைக் கூட பகைக்க முன்வந்த துணிவு, பொட்டல்புதூரில் அப்துல்காதர் என்ற ஏகத்துவவாதியின் வாடை கூட தமுமுகவின் மீது படியாமல் பார்த்துக் கொண்டு, அதன் காரணமாகவே அங்குள்ள குராபிகளை தமுமுகவில் சேர்த்துக் கொண்டது, அரசியல்வாதிகளுக்கு பாராட்டு விழா நடத்துவது, ஃபித்னா பிரசுரங்கள், இணைய தளங்கள் மூலம் அவதூறுப் பிரச்சாரம் என இதுபோன்ற எண்ணற்ற காரியங்களையெல்லாம் மார்க்கத்தில் நுணுக்கமாகப் பார்த்துத் தான் செய்கின்றார்கள் போலும். என்னே இவர்களின் கொள்கைப் பிடிப்பு.

இதுபோன்ற கொள்கைப் பிடிப்பு மட்டும் இருந்திருந்தால் இப்படிப்பட்ட முஜாதலா, முபாஹலா விவகாரமே ஏற்பட்டிருக்காது. எனவே கொள்கைவாதிகளிடமிருந்து கையகப்படுத்த வேண்டிய காசு, பணத்திற்காக இவர்கள் நடத்தும் கொள்கைப் பிடிப்பு நாடகத்தையும், இதற்கு பி.ஜே. என்ற தனி மனித வெறுப்பை மூலதனமாகக் கொண்டு மிக ராகமாக ஒத்து ஊதுபவர்களையும் மக்கள் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்போது அவர்கள் தங்கள் பிரசுரத்தில் கூறும் பொய்களை முதலில் பார்ப்போம்.

தமுமுக தலைமை நிர்வாகிகளில் சிலர் மீது சில குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகின்றார். தமுமுகவினர் இதற்கு மறுப்பு தெரிவித்த போது, யார் உண்மையாளர்? என்பதை அறிந்து கொள்ள தமுமுவினர் தன்னுடன் முபாஹலா செய்யத் தயாரா? என்று பி.ஜே. சவால் விட்டார்.

பொய்யை முதலீடாகக் கொண்டு மூளைச் சலவை செய்யும் இவர்கள் தங்கள் பிரசுரத்தை முதன்முதலில் பொய்யைக் கொண்டே வாதத்தை முன்னிறுத்துகின்றனர்.

முபாஹலாவுக்கு முதன்முதலில் அழைத்தவர் யார்? தவ்ஹீது கொள்கைப் பிடிப்பிலும், மத்ஹபுக்கு எதிரான போரிலும் களம் கண்ட சூரப்புலியான ஜவாஹிருல்லாஹ் தான் தென்சென்னை மாவட்ட தமுமுக பொதுக்குழுவிலும் கோவையிலும் முதன்முதலில் முபாஹலாவுக்கு அழைத்தார். அப்படி அழைக்கும் போது தலைசிறந்த மார்க்க அறிஞர்கள் (?) எங்கே போனார்கள். முபாஹலாவிற்கு அழைப்பதற்கு முன்பே இந்த வரலாற்று வாத்தியார் அவர்களிடம் கலந்திருக்க வேண்டாமா?

பொதுவாகவே முபாஹலாவைப் பொறுத்தவரை பி.ஜே. முந்துவதில்லை. அதைத் தான் அவர் கொள்கையாகவும் வைத்திருக்கின்றார். காயல்பட்டிணத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் வைத்து, ஜலீல் முஹைதீன் என்பவர் விட்ட முபாஹலா சவால் ஒரு துண்டுச் சீட்டு மூலம் தெரிவிக்கப்படுகின்றது. அந்தக் கூட்டத்திலேயே இந்த அழைப்பை இதுவரை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தது தவறு என்று தவ்ஹீதுவாதிகளை கடுமையாக சாடிவிட்டு, முபாஹலா அழைப்பை பி.ஜே. ஏற்றுக் கொள்கின்றார்.

அவ்வாறு ஏற்றுக் கொள்வதற்கு முன்னால், விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! (அல்குர்ஆன் 16:125) என்ற வசனத்தின் அடிப்படையில் முஜாதலா (விவாதம்) என்ற ஒரு வழிமுறை இருக்கின்றது, முதலில் முஜாதலா செய்வோம், அது ஒத்து வரவில்லையென்றால் கடைசி ஆயுதமாக முபாஹலாவை எடுப்போம் என்று கூறினார். மேடையில் கூறியது போலவே முஜாதலா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதை வரைமுறைப் படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் முபாஹலா என்று முடிவானது. எனவே முபாஹலாவுக்கு இதுவரை பி.ஜே. யாரையும் அழைப்பதில்லை. அழைப்பை ஏற்றுக் கொள்வதைத் தான் வழிமுறையாகக் கடைப்பிடித்து வருகின்றார்.

அந்த அடிப்படையில் தான் வாணியம்பாடி வாத்தியார் வரிந்து கட்டிக் கொண்டு முபாஹலாவுக்கு அழைத்ததும், அசத்தியத்தில் இருக்கும் அவரே இப்போது முபாஹலாவுக்கு அழைப்பு விடுக்கும் போது, சத்தியத்தில் இருக்கும் நாம் சத்தியத்தை நிலைநாட்ட ஓர் அரிய வாய்ப்பு, இதை நழுவ விடக் கூடாது என்று கருதி பி.ஜே. முபாஹலாவுக்கு ஒத்துக் கொண்டு, அதைப் பொது மேடைகளிலும், கோவை அப்துர்ரஹீம் அவர்களுக்கு எழுதிய கடிதம் மூலமும் தெரிவித்தார்.

வாணியம்பாடி வாத்தியார் விட்ட முபாஹலா சவாலை பி.ஜே. ஏற்றுக் கொண்டார். இதுதான் உண்மை என்று அனைவருக்கும் தெரியும் எனும் போது, பி.ஜே. தான் முபாஹலா சவால் விட்டார் என்று திரிப்பது எவ்வளவு பெரிய பொய், அவதூறு என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மையைக் கூட தீர விசாரிக்காமல் இந்த சிறந்த மார்க்க அறிஞர்கள் (?) ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு கூற வரலாமா?

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் 49:6) என்ற வசனத்தை இவர்களிடமே திருப்பி விடுகின்றோம்.

பொய்யை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் செய்து வரும் தமுமுகவினரைப் போல, பொய்யை அடிப்படையாக வைத்தே இந்தப் பிரசுரமும் துவங்கியுள்ளது. இதிலிருந்தே தமுமுகவினர் யார்? இவர்களுக்கு திரைமறைவில் இருந்து கொண்டு ஃபத்வா கொடுக்கும் சிறந்த மார்க்க அறிஞர்கள் (?) யார் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

முபாஹலாவுக்கு ஆதாரமாக ஒரு நபிமொழியைக் கூட காட்டவில்லை என்று புலம்பியிருக்கின்றார்கள். முபாஹலாவிற்கு ஹதீஸை விடச் சிறந்த ஆதாரமான குர்ஆன் வசனத்தை ஏகத்துவம் இதழில் ஆதாரமாகக் காட்டியிருக்கும் போது இவர்கள் ஒரு நபிமொழியைக் கூட ஆதாரமாகக் காட்டவில்லை என்று கூறுவது அபத்தமாகும்.

ஒரு பிரச்சனைக்கு குர்ஆன் ஆதாரத்தைக் காட்டும் போது, இது போதாது எங்களுக்கு ஹதீஸ் தான் வேண்டும் என்று இந்த சிறந்த அறிஞர்கள் (?) கேட்பார்கள் போலும். ஒரு நபிமொழியைக் கூட காட்டவில்லை என்று கூறுவதன் மூலம் நம்மை மனோ இச்சையைப் பின்பற்றுபவர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இவர்கள் இறங்கியுள்ளனர் என்றால் இவர்களின் நோக்கம் பொய்யைப் பரப்புவதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

முபாஹலா தொடர்பான வசனத்தை நபித்தோழர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்கள்? என்பதை விளக்குவதற்காக சில செய்திகளை நாம் வெளியிட்டிருந்தோம். அதை விமர்சித்து இவ்வாறு எழுதியுள்ளார்கள்.

கேள்வி 1: இதுநாள் வரை நபித்தோழர்களின் கருத்துக்களை மார்க்கத்தின் ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது, குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகியவை மட்டுமே மார்க்கத்தின் ஆதாரங்கள் என்று மேடைக்கு மேடை முழங்கியும், எழுதியும் வந்தவர்கள் இப்போது திடீரென நபித்தோழர்கள் இருவரின் தனிப்பட்ட செயல்பாடுகளை ஆதாரங்களாகக் காட்டுவது ஏன்?

இதுதான் அவர்கள் நம்மிடம் கேட்கும் கேள்வி! இதற்குப் பின்னால் கேள்வி 2, 3, 4 என்று ஏதோ வெவ்வேறு கேள்விகளைக் கேட்டு திணற அடித்திருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) தொப்பி போட்டதை ஆதாரமாகக் கொள்வார்களா? அர்ஷ், குர்ஸி இரண்டும் வெவ்வேறு என்ற இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதை ஏற்பார்களா? வருடந்தோறும் ஜகாத் கொடுக்காதவர்கள் மீது போர் தொடுப்பார்களா? என்று இவர்கள் அடுக்கும் 2,3,4 எல்லாமே முதல் கேள்வியை மையமாகக் கொண்டது என்பதை எடுத்த எடுப்பில் யார் பார்த்தாலும் விளங்கிக் கொள்ள முடியும். இப்படிக் கேள்விகளை அடுக்குவதற்கு சிறந்த அறிஞர்களின் (?) சிந்தனைப் புலனாய்வு தேவைப்பட்டுள்ளது என்பதை எண்ணி நாம் வியக்காமல் இருக்க முடியவில்லை.

இப்படியே முத்தலாக்கை ஏற்றுக் கொள்வார்களா? கூட்டு துஆவை ஏற்றுக் கொள்வார்களா? தராவீஹ் 20 ரக்அத்துக்கள் என்று ஏற்றுக் கொள்வார்களா? என்று வரிசையாக 50 கேள்விகளைப் போட்டிருந்தால் பார்ப்பவர்களுக்கு இன்னும் பிரமாண்டமான தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

அடுத்து இவர்கள் நான்கு கேள்வியாகப் பிரித்துப் போட்டுள்ள ஒரு கேள்விக்கு வருவோம். இதுவரை குர்ஆன், ஹதீஸ் தான் மார்க்க ஆதாரம் என்று கூறியவர்கள் இன்று நபித்தோழர்களின் கூற்றை ஆதாரமாகக் காட்டியிருப்பது ஏன்? இதுதான் இவர்களது நான்கு (?) கேள்விகளின் சாராம்சம்!

இதுநாள் வரையிலும், இனி எதிர்காலத்திலும் மார்க்கத்திற்கு ஆதாரமாக குர்ஆன், ஹதீஸைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும், ஸஹாபாக்கள் உள்ளிட்ட தனிப்பட்ட நபர்களின் கருத்துக்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது நமது உறுதியான நிலைப்பாடு! அந்த நிலைப்பாட்டில் எங்களுக்குக் கடுகளவு கூட மாற்றமில்லை. இன்ஷா அல்லாஹ் நாங்கள் அணுவளவு கூட மாற மாட்டோம் என்று இங்கு உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால் நிலைப்பாட்டில் மாறி நிற்பவர்கள் நம்மைப் பார்த்து விமர்சிப்பது தான் வேடிக்கையாக உள்ளது. இவர்களின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து இவர்களே அல்ஜன்னத் என்ற பத்திரிகையில் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்கள். இவர்கள் நம்முடன் இருந்த போது நபித்தோழர்கள் விஷயத்தில் கொண்டிருந்த நிலைபாட்டிற்கு நேர் முரணான கொள்கையை இப்போது அறிவித்துள்ளார்கள்.

இவர்களின் இந்த முரண்பாடு, கொள்கை மாற்றம் குறித்து, நபித்தோழர்களும் நமது நிலைபாடும் என்ற தலைப்பின் கீழ் இதே இதழில் விளக்கப்பட்டுள்ளது.

இங்கே நாம் கேட்க விரும்புவது, ஒருவர் ஓர் இயக்கத்தை விட்டு இன்னோர் இயக்கத்திற்குப் போகலாம். கூடாரம் விட்டு கூடாரம் போகலாம். ஆனால் கொள்கையை விட்டுப் போகலாமா? இவ்வாறு மாறுவது நாடகம், நடிப்பு, நயவஞ்சகம் என்ற தன்மைக்குள் தான் வரும்.

ஒருவருடன் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றும் போது அவர் கூறும் நிலைபாட்டை தலையசைத்து ரசித்து சரி கண்டது மட்டுமல்லாமல் பிரச்சாரமும் செய்து விட்டு இப்போது இயக்கத்திலிருந்து வெளியே சென்ற பின், அந்த நிலைபாட்டை அவருக்காக எடுத்தேன், இப்போது அதிலிருந்து மாறி விட்டேன் என்று ஒருவர் சொல்வாரானால் அவர் மிகவும் ஆபத்தானவர் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இவர் எதையோ உள்ளுக்குள் எதிர்பார்த்து நடித்திருக்கின்றார். அவருக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டதும் அதை விட்டு வெளியேறி, இன்னொரு கூடாரத்திற்குப் போய் தனக்கே எதிராகப் பேசுகின்றார் என்றால் இப்போதும் அவர் நடிக்கவே செய்கின்றார் என்று நன்றாகத் தெரிகின்றது.

சமீப காலத்தில் இப்படி ஒருவர் அல்ல! ஒரு நாடகக் கம்பெனியே கிளம்பியிருக்கின்றது. எல்லோருமே ஒரே பல்லவியைத் தான் பாடுகின்றார்கள். அப்போது அவருடன் இருந்தோம், அதனால் அப்படி முடிவெடுத்து விட்டோம் என்று இந்த ஒரே டயலாக்கை தங்கள் பாத்திரங்களில் பேசி நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். மறு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் எங்களுக்கு அப்போது மூளை வேலை செய்யவில்லை, நாங்கள் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் போட்டுள்ள பட்டங்கள் எல்லாம் அப்போது காற்றில் பறந்து விட்டன என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றார்கள்.

எனவே இந்த நாடகக் கம்பெனியினர் அப்போதும் நடித்திருக்கின்றார்கள். இப்போதும் நடித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். இந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் நடிப்பை நம்பி மக்கள் ஏமாறத் தயாரில்லை. இத்தகையவர்கள் நம்மைப் பார்த்து, நிலைபாட்டில் மாறி விட்டீர்களா? என்று கேட்பது நகைப்பிற்குரிய விநோதத்திலும் விநோதமாகும்.

இப்போது அவர்கள் கேள்வியில் எழுப்பியிருக்கும் வாதத்திற்கு வருவோம்.

இப்போது திடீரென நபித்தோழர்களின் செயல்பாடுகளை ஆதாரமாகக் காட்டுவது ஏன்? இது தான் அவர்களின் கேள்வி!

இவர்கள் எழுப்பியிருக்கும் இந்தக் கேள்வி அபத்தமானதும், மக்களை திசை திருப்பும் முயற்சியும் ஆகும். நபித்தோழர்கள் தொடர்புடைய மூன்று செய்திகளை ஏகத்துவத்தில் எடுத்துக் காட்டிவிட்டு, நாம் குறிப்பிட்டிருக்கும் வாசகம் இது தான்.

முஸ்லிம்களுக்கு மத்தியில் முபாஹலா செய்யலாம் என்பதால் தான் நபித்தோழர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்.

இவ்வாறு தான் ஜூலை 2004 இதழில் குறிப்பிட்டுள்ளோம். முபாஹலா தொடர்பான வசனத்தை நாம் புரிந்து கொண்டது போலத் தான் நபித்தோழர்களும் புரிந்து கொண்டார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத் தான் இந்தச் செய்திகளைக் குறிப்பிட்டோமே தவிர முபாஹலாவிற்கு ஆதாரமாக இந்தச் செய்திகளை நாம் குறிப்பிடவேயில்லை. முபாஹலா செய்யலாம் என்பதற்கு சம்பந்தப்பட்ட வசனமே போதுமான சான்றாகும். மேற்கண்ட மூன்று சம்பவங்களும் நபித்தோழர்கள் வாழ்வில் நடக்காமல் இருந்தாலும் கூட அந்த வசனமே போதுமானதாகும்.

ஏகத்துவத்தின் வாசக அமைப்பு இவ்வளவு தெளிவாக இந்த அளவுக்குள் முடிந்திருக்கும் போது, நபித்தோழர்களின் இந்தச் செய்திகளை நாங்கள் வலுவான ஆதாரமாக சமர்த்திருப்பதைப் போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்றால் இதற்கு என்ன பொருள்? ஒரேயொரு அடிப்படை தான். குர்ஆன், ஹதீஸ் என்ற அடிப்படையை எல்லாம் விட்டு விட்டு ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கேள்வி 1,2,3 என்று போட்டு விட்டால் உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் தத்துவம் தான் இவர்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக நான்காவது கேள்வியில் வலுக்கட்டாயமாக ஒரு பொய்யைத் திணித்துள்ளார்கள்.

கேள்வி 4: நபித்தோழர்கள் இருவரின் கருத்துக்களை ஆதாரமாகக் காட்டுபவர்கள் வருடந்தோறும் ஜகாத் கொடுக்காதவர்கள் மீது போர் தொடுக்க வேண்டும் என்று கலீபா அபூபக்ர் (ரலி) முடிவெடுத்ததையும், அதை எல்லா நபித்தோழர்களும் ஏற்று போர் புரிந்ததையும் (புகாரி: 1399, 1400) ஆதாரமாகக் கொண்டு அல்லாஹ்வின் வழியில் பி.ஜே.வை எதிர்த்துப் போரிடத் தயாரா?

வருடந்தோறும் ஜகாத் கொடுக்காதவர்கள் மீது போர் தொடுக்க வேண்டும் என்று அபூபக்ர் (ரலி) முடிவெடுத்ததாக எழுதியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்து அபூபக்ர் (ரலி) வந்ததும் அரபிகளில் சிலர் காஃபிர்களாகி விட்டனர். "லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர் என்னிடமிருந்து தமது உயிரையும் உடைமையையும் காத்துக் கொண்டார். தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர... அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?'' என்று உமர் (ரலி) கேட்டார். அபூபக்ர் (ரலி), உமரை நோக்கி, "அல்லாஹ்வின் மீதாணையாக, தொழுகையையும் ஜகாத்தையும் பிரித்துப் பார்ப்பவருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஜகாத் செல்வத்திற்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக, நபி (ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன்'' என்று கூறினார். இதுபற்றி உமர் (ரலி), "அல்லாஹ்வின் மீதாணையாக, அபூபக்ரின் இதயத்தை அல்லாஹ் விசாலமாக்கியிருந்ததாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என்று நான் விளங்கிக் கொண்டேன்'' என்று கூறினார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1399, 1400

இவர்கள் குறிப்பிட்டுள்ள எண்ணில் உள்ள ஹதீஸ் இது தான். இதில் வருடந்தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று அபூபக்ர் (ரலி) முடிவெடுத்ததாக எங்கே இடம் பெற்றுள்ளது? வருடந்தோறும் என்ற வார்த்தையே இந்த அறிவிப்பில் இல்லாத போது, வலிய கொண்டு வந்து திணிப்பதன் உள்நோக்கம் என்ன? பி.ஜே.யை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இவர்கள் ஹதீஸ்களுடன் விளையாடுகின்றார்கள். அதற்காக ஹதீஸ்களின் பெயரால் கூட பொய் சொல்லத் துணிந்து விட்டார்கள்.

அந்தப் பிரசுரத்தில் இவர்களே குறிப்பிட்டிருப்பது போன்று யூதர்களின் நடைமுறையைப் பின்பற்றி திரித்துக் கூறுவதும், மார்க்கத்தை தங்கள் வசதிக்காக வளைப்பதும் இவர்கள் தான் என்பற்கு அவர்களின் பிரசுரமே சாட்சி சொல்கின்றது.

கேள்வி 5: ளிஹார் சம்பந்தமாக முபாஹலா செய்யத் தயாராக இருப்பதாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை இரண்டாவது ஆதாரமாக ஏகத்துவம் இதழில் எடுத்து வைத்துள்ளார்கள்.....அந்த அறிவிப்பாளர் வரிசையில் வரக்கூடிய அபுஜுஸாயி நஸ்ர் இப்ன் தரிஃப் என்பவர் பொய்யர் என்று எல்லா ஹதீஸ் துறை வல்லுநர்களும் கூறுகின்றனர்.

இந்த அறிவிப்பு பலவீனமானது என்பதால் நாம் எடுத்து வைத்த வாதத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஏனென்றால் இந்தச் செய்திகளை நாம் ஆதாரமாகக் காட்டவில்லை. மேலும் இவர்களது வாதப்படியே பார்த்தாலும் மற்ற இரண்டு அறிவிப்புகளும் ஆதாரப்பூர்வமானவை என்பதால் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே!

எங்களுக்கு அன்றும் இன்றும் குர்ஆன், ஹதீஸ் தான். இதற்கு எதிராக ஸஹாபாக்களின் கருத்து வந்து நின்றாலும் அதை விட்டு விட்டு குர்ஆன், ஹதீஸைத் தான் ஆதாரமாகக் கொள்வோம் என்ற ஒரே நிலைபாட்டில் தான் இருக்கிறோம்.

குர்ஆன், ஹதீசுக்கு நபித்தோழர்கள் கொடுக்கும் விளக்கத்தை மார்க்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும், நபித்தோழர்கள் குர்ஆன் ஹதீசுக்கு மாற்றமாக எந்தக் கருத்தையும் கூறியது கிடையாது என்ற புதிய நிலைபாட்டின் படி இந்தச் செய்திகளைச் சப்தமில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே!

குர்ஆன், சுன்னாவிற்கு எதிராக எந்தவொரு விஷயத்தையும் நபித்தோழர்கள் கூறியதில்லை என்ற இவர்களது புதிய அடிப்படையின்படி கண்ணாலும், தலையாலும் முத்தமிட்டு இந்த இரண்டு செய்திகளையும் ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா? இதையும் ஏன் மறுக்க வேண்டும்?

இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவர்களது புதிய ஏற்பாட்டிலிருந்து, புதிய நிலைபாட்டிலிருந்து தடம் புரளக் கூடாது. அப்படிப் புரள்கின்றார்கள் என்றால் இதிலும் இவர்களிடம் நடிப்பு தான் விஞ்சி நிற்கின்றது என்பது தான் அர்த்தம்.

கேள்வி 6: முபாஹலாவிற்கு அழைக்கும் பி.ஜே.யும், அதற்கு ஒத்து ஊதும் ஏகத்துவம் இதழும் எடுத்து வைக்கும் முக்கிய ஆதாரம் அல்குர்ஆன் 3:61 ஆகும்.

உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டா வாதம் செய்தால் "வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:61)....

...வஹீ மூலம் விளக்கம் வந்த விஷயத்தில் விதண்டாவாதம் செய்தவர்களுடன் மட்டும் தான் முபாஹலா செய்ய வேண்டும் என்று அல்லாஹ் சொல்கின்ற போது தன்னிடம் முரண்பட்டவர்களை முபாஹலா செய்ய பி.ஜே. அழைக்கிறாரே! அல்லாஹ் விளக்கம் அளிக்காத ஒரு விஷயத்தில் ஏன் பி.ஜே. முபாஹலாவுக்கு அழைக்கிறார்?


இங்கும் கோயபல்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறி வருகின்றார்கள். பி.ஜே. முபாஹலாவிற்கு அழைத்தார் என்பது தான் அந்தப் பொய்.

ஜவாஹிருல்லாஹ் முபாஹலாவுக்கு அழைப்பு விடுத்தார். அதை பி.ஜே. ஏற்றுக் கொண்டதும், ஜவாஹிருல்லாஹ் அதிர்ச்சிக்குள்ளானார். அவருக்கு முன்னால் இருந்தது இரண்டே இரண்டு வழிகள் தான். ஒன்று நான் முபாஹலாவுக்குத் தயாரில்லை என்று அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் பி.ஜே. சொன்னது உண்மையாகி இவர் பொய்யர் என்பது நிரூபணமாகி விடும். அல்லது அழைத்தபடி முபாஹலாவுக்கு வர வேண்டும். ஆனால் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கின்றது. அதனால் குறுக்கு வழியைத் தேடுகின்றது. அந்தக் குறுக்கு வழிதான் முபாஹலாவைப் பற்றி மேற்கண்ட விளக்கம்.

தமுமுக என்றாலே குமட்டலுக்கு உள்ளானவர்கள், மார்க்கப்படி கொடி, கோஷங்கள் எல்லாம் கூடாது என்று மேடைக்கு மேடை முழங்கியவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஜவாஹிருல்லாஹ்வுக்காக மார்க்கத்தை வளைக்க முன்வந்தனர். அதன் விளைவு தான் இந்தக் குருட்டு விளக்கம்.

வஹீ மூலம் விளக்கம் வந்த பின்னர் தர்க்கம் செய்பவர்களுடன் தான் முபாஹலா செய்ய வேண்டும் என்றால் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு யாரும் முபாஹலா செய்யக் கூடாது என்று தான் கூற வேண்டும். ஆனால் இவர்களே இந்தப் பிரசுரத்தின் இரண்டாவது பக்கத்தில், மார்க்க விஷயங்களுக்காக முபாஹலா செய்யலாம் என்று எழுதியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ மூலம் அல்லாஹ் விளக்கம் அளித்த உண்மையின் அடிப்படையில் முபாஹலா செய்தார்கள். வஹீ மூலம் விளக்கம் வராதவர்களாகிய நாம், நம்முடைய கருத்து உண்மை எனத் தெளிவாகத் தெரியும் போது முபாஹலா செய்யலாம் என்பதைத் தான் இந்த வசனம் எடுத்துக் காட்டுகின்றது. பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்ற வாசகமும் இதையே சுட்டிக் காட்டுகின்றது என்பதை ஜூலை இதழிலேயே விளக்கியுள்ளோம்.

வஹீ மூலம் விளக்கம் வந்த பின்னர் தான் முபாஹலா செய்ய வேண்டும் என்று கூறும் இவர்கள், மார்க்க விஷயத்தில் முபாஹலா செய்யலாம் என்கின்றனர். அப்படியானால் மற்றவர்களுக்கும் வஹீ மூலம் விளக்கம் வருமா?

வஹீ மூலம் நபிகள் நாயகத்திற்கு வந்த விளக்கத்தின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, மற்றவர்கள் முபாஹலா செய்யலாம் என்று வாதிடுவார்களானால் அதுவும் தவறாகும். வஹீ மூலம் வந்த விளக்கம் எது? என்பதில் கருத்து வேறுபாடு ஏற்படும் போது, இதை விளக்குவதற்கு இன்னொரு வஹீ வரும் என்று கூறப் போகின்றார்களா?

மேலும் இவர்கள் தமது விளக்கத்தில்,

...வஹீ மூலம் விளக்கம் வந்த விஷயத்தில் விதண்டாவாதம் செய்பவர்களுடன் மட்டும் தான் முபாஹலா செய்ய வேண்டும் என்று அல்லாஹ் சொல்கின்ற போது....


என்று கூறியுள்ளனர். மட்டும் தான் என்ற வார்த்தையை அல்லாஹ் சொல்லாவிட்டாலும் இவர்களாக வளைந்து சேர்த்துள்ளனர். வஹீ மூலம் விளக்கம் வந்த விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் முபாஹலாவுக்கு அழைப்பு விட்டார்கள். ஆனால் அதற்கு மட்டும் தான் என்பது இவர்களாக நுழைத்துக் கொண்டாகும். அதையும் அல்லாஹ் சொல்வதாக அல்லாஹ்வின் மீதே இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர்.

கேள்வி 7: நம்பிக்கையாளர்களின் தாயாகிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு பரப்பப்பட்ட போது (புகாரி 4141, 2661) தன்னுடைய மனைவி மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டை நீக்க நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களûயும் அவதூறு பரப்பியவர்களையும் முபாஹலா செய்யுமாறு அழைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. (ஆயினும் பெரிய இடைவெளிக்குப் பிறகு அல்லாஹ்வே இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்)

அஷ்அஸ் பின் கைஸ் (ரலி)க்கும் ஒரு யூதருக்கும் இடையே நிலத்தின் உரிமை சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் யூதரிடம் மட்டும் சத்தியம் வாங்கிக் கொண்டு நிலத்தை அவரிடமே ஒப்படைத்தார்கள். (புகாரி 2666, 2667) ஆயினும் இப்பிரச்சனையில் தொடர்புடைய நபித்தோழரை முபாஹலா செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் கேட்டுக் கொள்ளவில்லை.....

....நபி (ஸல்) அவர்களே வேறு எந்த விஷயத்திற்காகவும் முபாஹலா செய்யாத போது பிற்காலத்தில் வந்த பி.ஜே. வேறு காரணங்களுக்காக முபாஹலா செய்யலாம் என்று கூறுவது மார்க்கத்தில் நபி காட்டிய வழி அல்லாமல் தானே புதிதாக ஒரு வழி ஏற்படுத்திக் கொள்வதாகும் சுருக்கமாகச் சொன்னால் பித்அத் ஆகும்.


இந்தக் கேள்வி சிறந்த அறிஞர்களின் (?) சிந்தனா சக்தியை நன்றாகவே வெளிப்படுத்துகின்றது. இவர்கள் குர்ஆனில் எந்த அளவுக்குத் தொடர்புடையவர்களாக இருக்கின்றார்கள் என்பதையே கேள்விக் குறியாக்குகின்றது.

ஆயிஷா (ரலி) அவர்கள் விஷயம் குற்றவியல் சட்டத்தின் கீழ் வரும் ஓர் அவதூறு விஷயம். இந்த அவதூறு விஷயத்திற்கு அல்லாஹ்வே தெளிவாக வழி காட்டி விட்டான். அதன்படி, இவ்வாறு அவதூறு கூறுவோர் நான்கு சாட்சிகைளக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வரவில்லையானால் அவர்கள் சுமத்திய அந்த அவதூறுக்காக எண்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்று அவதூறுக்கான குற்றவியல் தண்டனை என்ன என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு விட்டான். (இதை அவர்களும் தங்கள் பிரசுரத்தில் ஒத்துக் கொள்கின்றார்கள்)

அப்படி அல்லாஹ் வழிகாட்டிய ஒரு விஷயத்தில் முபாஹலா செய்யுமாறு சொல்லியிருக்க வேண்டியது தானே என்று கேட்பது எப்படி பொருத்தமான கேள்வியாகும்? ஆயிஷா (ரலி) போன்ற கற்பு நெறியுள்ள பெண்கள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக இதுபோன்ற அற்புதமான குற்றவியல் சட்டத்தை நிலைநாட்டிய பின் முபாஹலா செய்யச் சொல்வது முட்டாள்தனமான விளக்கமாகும்.

அல்லாஹ் இந்தச் சட்டத்தை இறக்குவதற்கு முன்னர் அல்லாஹ்வுடைய தூதர் முபாஹலா செய்திருக்கலாம் அல்லவா? என்று கேட்க வருகின்றார்கள். வஹீயின் தொடர்பில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அவதூறு விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ் அறிவிக்கும் வரை காத்திருந்தார்கள் என்பதைக் கூறும் பல்வேறு அறிவிப்புகள் உள்ளன.

ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கோரி, அவன் பக்கம் திரும்பி விடு, ஏனெனில் அடியான் தனது பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்பு கோரினால் அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான்'' என்று கூறியதாக புகாரி 2261, 4141, 4750 உள்ளிட்ட ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த வார்த்தைகள் அவர்கள் இந்த விஷயத்தில் இறைவனின் தீர்ப்பை எதிர்பார்த்துள்ளார்கள் என்பதையே காட்டுகின்றது.

ஆனால் இவர்களோ தங்கள் வசதிக்காக அல்லாஹ்வுடைய தூதருக்கே பாடம் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.

அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) சம்பவமும் அதுபோல் அல்லாஹ்வின் தூதரால் வழிகாட்டப்பட்ட ஒரு சிவில் விஷயம். ஒரு சொத்தை இருவரும் உரிமை கொண்டாடும் போது அந்தச் சொத்தின் உரிமையாளர் யார் என்ற கேள்விக்கு விடை காண வேண்டும். வாதியிடம் உள்ள ஆதாரம், சாட்சியம், தடயம் அடிப்படையில் அவரிடத்தில் ஒப்படைக்க வேண்டும். வாதியிடம் ஆதாரம் இல்லாத போது பிரதிவாதியுடைய சத்தியத்தின் அடிப்படையில் சொத்தை ஒப்படைக்க வேண்டும். அதைத் தான் நபி (ஸல்) அவர்கள் செய்வதைப் பார்க்கிறோம். இதில் முபாஹலாவுக்கு என்ன வேலை இருக்கின்றது?

இவர்கள் சொல்வது போல் முபாஹலாவை இங்கே அமல் படுத்திப் பார்ப்போம். இருவரும் பரஸ்பரம் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று கூறுவதால் சொத்து யாருக்கு என்று முடிவு கிடைத்து விடுமா?

சொத்து யாருக்கு என்று தீர்ப்பு சொல்ல வேண்டிய ஒரு விவகாரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குத் தக்க ஒரு வழிமுறையைக் காட்டித் தருகின்றார்கள். இதைப் புரிந்து கொள்ளாமல் முபாஹலா செய்யக் கூடிய வழக்கு என்று இதை இந்தச் சிறந்த அறிஞர்கள் (?) விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

முபாஹலா என்பது சம்பந்தப்பட்ட இருவர் அல்லது இரு தரப்பினர், பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக என்று கூறி முடிவை அல்லாஹ்விடம் விட்டு விடுவதாகும். ஆனால் மேற்கூறப்பட்ட அஷ்அஸ் பின் கைஸ் வழக்கிலோ சாட்சியங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் ஒரு சொத்தை உரியவரிடம் ஒப்படைப்பதாகும். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளாமல் இரண்டையும் போட்டுக் குழப்பி, தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பியுள்ளார்கள்.

இவர்களுடைய இந்தக் கேள்வியில் இன்னொரு பைத்தியக்காரத்தனமான வாதமும் தொனிக்கின்றது. அதாவது முபாஹலா என்பது ஓர் அனுமதிக்கப்பட்ட காரியம். இதை ஒருவர் செய்யவும் செய்யலாம். செய்யாமலும் இருக்கலாம். அனுமதிக்கப்பட்ட காரியத்தை செய்து தான் ஆக வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்க முடியாது.

இவர்கள் எடுத்துக் காட்டும் ஆயிஷா (ரலி) சம்பவத்தில் கூட, அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஆயிஷா (ரலி)யை விட்டால் வேறு பெண்ணே இல்லையா? என்பது போல் கேட்கின்றார்கள். அதாவது ஆயிஷா (ரலி)யை தலாக் விட்டு விடுமாறு கூறுகின்றார்கள். தலாக் என்பது அனுமதிக்கப்பட்ட காரியம் தான். அதைப் பயன்படுத்துவதற்கு அரிய தருணம் இதுதான். எனவே நபி (ஸல்) அவர்கள் ஏன் தலாக் சொல்லவில்லை என்று யாராவது கேட்டால் அவரை என்னவென்று சொல்வோம்?

இவர்களுடைய வாதப்படி தலாக் என்ற அனுமதிக்கப்பட்ட காரியத்தை நபி (ஸல்) அவர்கள் இங்கு பயன்படுத்தியாக வேண்டும். இதைவிட வேறு சந்தர்ப்பம் கிடைக்குமா? ஆனால் நபி (ஸல்) அவர்கள் தலாக் சொல்லவில்லை. எனவே தலாக் சொல்வதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை என்று ஃபத்வா கொடுப்பார்களா?

கொள்கை விஷயங்களுக்காகத் தான் முபாஹலா செய்ய வேண்டும் என்ற இவர்களுடைய வாதப்படியே பார்த்தாலும் கொள்கை விஷயங்களுக்காக மாற்று மதத்தினருடனோ, அல்லது குராபிகளுடனோ இவர்கள் எத்தனை பேருடன் முபாஹலா செய்துள்ளார்கள்? கொள்கை விஷயத்தில் கூட ஏன் முபாஹலா செய்யவில்லை? என்று இவர்களிடம் கேட்டால், முபாஹலா செய்வது அனுமதிக்கப்பட்ட விஷயம். அதைச் செய்து தான் ஆகவேண்டும் என்று கூற முடியாது என்று விளக்கம் சொல்வார்கள்.

அதுபோலத் தான் குர்ஆனில் அனுமதிக்கப்பட்ட விஷயமான முபாஹலாவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யவில்லை என்று காரணம் கூறி அதை பித்அத் என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விஷயத்தை பித்அத் என்று கூறுபவர்களை இறைநம்பிக்கையாளர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?

கேள்வி 8: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அல்லாஹ்வின் சாபத்தைக் கொண்டோ அல்லாஹ்வின் கோபத்தைக் கொண்டோ, நரகத்தைக் கொண்டோ உங்களுக்கிடையில் சாபமிட்டுக் கொள்ளாதீர்கள். (நூல்: அபூதாவூத் 4906 ஹதீஸின் தரம்: ஹஸன்)

அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ, சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும் போது கூட அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண் படட்டும் என்றே கூறுவார்கள். (நூல்: புகாரி6031)

வஹீ (குர்ஆன், ஹதீஸ்) மூலம் தெளிவாக்கப்பட்ட விஷயங்களுக்கு மட்டும் தான் முபாஹலா செய்யலாம் என்று அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக்கியுள்ளான். இதன் மூலம் உலக விஷயங்களில் சாபம் இறங்குமாறு கேட்க (முபாஹலா) கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இங்கேயும் முபாஹலாவின் அர்த்தம் தெரியாமல் தான் குழம்பியுள்ளனர். ஒருவர் இன்னொருவரைப் பார்த்து சபிப்பது, அல்லது ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு சபிப்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அதைத் தான் இவர்கள் குறிப்பிட்டிருக்கும் ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் முபாஹலாவில் யாரையும் குறிப்பிட்டு சபிக்கவில்லை. தமுமுகவினர் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்றோ, அல்லது ஜவாஹிருல்லாஹ் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்றோ முபாஹலாவில் கூறப் போவதில்லை. பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று தான் கூறுகின்றோம். இதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.

இன்னும் சொல்லப் போனால் இரண்டு தரப்பும் தாங்கள் கூறுவது தான் உண்மை என்று சொல்லும் இன்னொரு கட்டமான கணவன், மனைவி விவகாரத்தைப் பற்றிக் கூறும் போது, முபாஹலாவைப் போன்றே பொய் சொல்பவர் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று கேட்க வேண்டும் என்று அல்லாஹ் கற்றுத் தருகின்றான்.

மனைவி மீது கணவன் குற்றச்சாட்டு கூறும் போது சாட்சியம் இல்லையென்றால், நான்கு தடவை சத்தியம் செய்து விட்டு ஐந்தாவது முறையாக, தான் பொய் கூறினால் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று கணவன், மனைவி ஆகிய இருவருமே கூற வேண்டும் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் 24:6-9 வசனங்களில் குறிப்பிடுகின்றாôன்.

இது இரண்டு முஸ்லிம்களுக்கிடையே நடக்கும் விஷயம் தான். நபி (ஸல்) அவர்கள் சாபத்தைக் கேட்கக் கூடாது என்று தடை விதித்துள்ளதால், இந்தக் குர்ஆன் வசனத்தில் கூறப்படுவது முஸ்லிம்களுக்குப் பொருந்தாது என்று கூறுவார்களா? இந்த வசனத்தை எப்படி மேற்குறிப்பிட்ட ஹதீசுக்கு முரணில்லாமல் விளங்குவோமோ அதுபோலத் தான் முபாஹலா வசனத்தையும் விளங்க வேண்டும்.

எனவே தாங்கள் சொல்வது உண்மையே என்று நம்புபவர்கள் இந்த வசனத்தைக் கண்டு யூதர்களைப் போன்று ஓடி ஒளிய வேண்டியதில்லை. பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று யூதர்கள் கூற முன்வராததற்கு ஒரே காரணம் அவர்கள் தங்கள் கூற்றில் பொய் சொல்கிறோம் என்று தெளிவாக உணர்ந்திருந்ததால் தான்.

யூதர்களைப் போன்று பொய்யை மூலதனமாகக் கொண்டு செயல்படும் தமுமுகவினர் அல்லாஹ்வின் சாபம் என்றதும் ஓடி ஒளிகின்றார்கள். இவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு மார்க்கத்தைத் திரித்துக் கூற இந்த சந்தர்ப்பவாதிகள் கிளம்பியுள்ளார்கள். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற தத்துவத்தின் அடிப்படையில் பி.ஜே.யை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் பொய்யர்கள் ஒன்றிணைந்துள்ளார்கள்.

நெல்லை ஜெபமணியுடன் ஏன் முபாஹலா செய்யவில்லை? காதியானிகளுடன் ஏன் முபாஹலா செய்யவில்லை? மெண்டல் 19 குரூப்பிடம் ஏன் முபாஹலா செய்யவில்லை ஆகிய மூன்று கேள்விகளை, கேள்வி எண்: 9, 10, 11 என்று பிரித்து தனித்தனியாக போட்டுள்ளனர்.

இந்த மூன்றும் ஒரே கேள்வி தான். ஒரே விஷயத்தை தனித்தனியாகப் பிரித்து மூன்று கேள்வியாகவும், நான்கு கேள்வியாகவும் ஆக்குவதற்கு சிறந்த மார்க்க அறிஞர்கள் (?) தேவைப்பட்டிருப்பதை நாம் வரவேற்கத் தான் வேண்டும். நெல்லை ஜெபமணி, காதியானி, 19 குரூப் ஆகியோரை ஏன் முபாஹலாவுக்கு அழைக்கவில்லை? என்பது தான்இந்த மூன்று (?) கேள்வியிலும் இவர்கள் எழுப்பியிருக்கும் வாதமாகும். என்ன அற்புதமான கேள்வி!

அல்லாஹ்வுக்காக முபாஹலாவுக்கு அழைக்காத பி.ஜே. தனிப்பட்ட விஷயத்தில் முபாஹலாவுக்கு அழைக்கிறார். அல்லாஹ்வின் அந்தஸ்தை விட தனிப்பட்ட அந்தஸ்து தான் முக்கியம் என்று பி.ஜே. கருதுகின்றாரா?

என்று கேட்டுள்ளனர். மீண்டும் கோயபல்ஸ் தத்துவத்தின் படி பொய்யைக் கூறியுள்ளனர். முபாஹலாவுக்கு முதலில் பி.ஜே. அழைக்கவில்லை, ஜவாஹிருல்லாஹ் தான் அழைத்தார் என்ற உண்மையை மறைப்பதற்காக மீண்டும் மீண்டும் அதே பொய்யைக் கூறுகின்றார்கள்.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று பி.ஜே. தானாக முன்வந்து யாரையும் முபாஹலாவுக்கு அழைக்கவில்லை. காயல்பட்டிணத்தில் ஜலீல் முஹைதீன் என்பவர் முபாஹலாவுக்கு அழைத்த போதும், 16:125 வசனத்தின் அடிப்படையில் முதலில் விவாதம் செய்வோம் என்று தான் கூறினார். அதற்கு வழியில்லாமல் போனதால் தான் முபாஹலா நடைபெற்றது.

இதுபோல் தமுமுகவினரிடமும் நேரடியாக குற்றம் சாட்டத் தயாரா? என்று தான் பி.ஜே. சவால் விட்டார். அதற்கு ஓடி ஒளிந்தவர்கள், முபாஹலாவிற்குத் தயாரா என்று கேட்டதும் அதற்கு பி.ஜே. ஒத்துக் கொண்டார். உண்மை இவ்வாறிருக்க, நம்முடன் விவாதம் புரிந்தவர்களையெல்லாம் முபாஹலாவுக்கு ஏன் அழைக்கவில்லை என்று கேட்பது அர்த்தமற்ற கேள்வியாகும்.

நெல்லை ஜெபமணி, காதியானி, 19 குரூப் ஆகியோர் தான் விவாதத்திற்கு வந்து விட்டார்களே! விவாதம் நடைபெற்று மக்களுக்கு உண்மை எது? பொய் எது? என்று தெளிவாகத் தெரியும் அளவுக்கு நமக்கு அந்த விவாதங்களில் வெற்றியும் கிடைத்தது. அப்படியிருக்கும் போது முபாஹலாவுக்கு ஏன் அழைக்க வேண்டும்? வாதத்தில் உண்மை தெரியாமல் போனால் கூட முபாஹலா செய்யத் தயாரா? என்று கேட்கலாம். ஆனால் வாதத்தில் தோற்று மக்களுக்கு உண்மை தெளிவான பின்னர் முபாஹலா செய்யத் தயாரா? என்று எப்படிக் கேட்க முடியும்?

முபாஹலா செய்வது கட்டாயக் கடமை என்பது போல், அவரை ஏன் அழைக்கவில்லை? இவரை ஏன் அழைக்கவில்லை? என்று கேள்வியின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகக் கேட்டுள்ளனர். இத்தனை குரூப்புகளையும் இவர்கள் அழைத்து முபாஹலா செய்து முடித்து விட்டது போன்று கேட்கின்றார்கள். இதே கேள்வியை இவர்களிடமும் நாம் திருப்பிக் கேட்க முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இன்னும் சொல்லப் போனால் நம்முடைய சவாலை ஏற்று விவாதத்துக்கு வந்த வகையில் அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். தாங்கள் கொண்ட கொள்கையில் உறுதிப்பாடு கொண்டு விவாதத்திற்கு வந்த அவர்கள் உண்மையில் பல மடங்கு பாராட்டுக்குரியவர்கள்.

நம்மைப் பார்த்து பொய் சொல்கின்றீர்கள், பொய் சொல்கின்றீர்கள் என்று பொய் பேசித் திரியும் தமுமுகவினர், தாங்கள் கொண்டிருக்கும் சத்தியத்தில் நம்பிக்கை கொண்டு விவாதத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையே! ஏகத்துவக் கொள்கையின் எதிர்ப்பாளர்களான இவர்களுக்கு கைகொடுத்துத் தூக்கி விடுவதற்காக மார்க்கத்தை வளைக்கத் துணிந்த அனைத்து பி.ஜே. எதிர்ப்பு சங்க ஆலிம்கள் தாங்கள் கொண்டிருக்கும் உண்மையின் மேல் நம்பிக்கை கொண்டு விவாதத்திற்கு வரவில்லையே!

விவாதத்திற்கு மறுத்ததிலிருந்து, நம்மிடம் விவாதம் செய்தவர்களை விடவும் கீழ் நிலைக்குச் சென்று விட்டவர்கள், அவர்களை ஏன் முபாஹலாவுக்கு அழைக்கவில்லை என்று கேட்பதற்கு என்ன உரிமை இருக்கின்றது?

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன் 49:9)

இந்த வசனத்தின் அடிப்படையில் இரண்டு கூட்டத்தினரிடையே இணக்கத்தை ஏற்படுத்துதல், அதில் ஒரு கூட்டம் வரம்பு மீறியிருந்தால் அந்தக் கூட்டத்திற்கு எதிராகக் களம் இறங்குதல் இந்த இரண்டைத் தவிர முஃமின்களுக்கு மூன்றாவது வழியில்லை என்று நாம் எழுதியிருந்தோம். இதை விமர்சித்து கேள்வி எண் 12ல் கேள்வி எழுப்பியுள்ளர்.

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தில் ஜிஹாத் செய்யுங்கள் என்று அல்லாஹ் கூறியிருந்தால், அதை கருத்துப் போர், விவாதப் போர் என்று கூறி அவர்கள் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் மேற்கண்ட வசனத்தில், ஃபகாதிலுல்லதீ என்ற பதத்தை அல்லாஹ் கூறியுள்ளான். இதில் உள்ள கிதால் என்ற வார்த்தைக்கு இரு தரப்பினர் (இரு நபர்கள் அல்லது இரு கூட்டங்கள்) தங்களுக்கிடையே (ஆயுதம் தாங்கி) சண்டையிடுதல் என்ற அர்த்தம் மட்டுமே கொடுக்க முடியும்.

இது மக்கா வாழ்க்கை, இங்கு காஃபிர்களை எதிர்த்து கிதால் (ஆயுதம் தாங்கிய ஜிஹாத்) கிடையாது என்று ஆணித்தரமாக உரையாற்றி வந்த பி.ஜே. இப்போது திடீரென பல்டியடித்து, முஸ்லிம்களுக்கு எதிராகவே கிதால் (ஆயுதம் தாங்கிய ஜிஹாத்) செய்ய அறைகூவல் விடுக்கின்றார். குர்ஆனை மொழிபெயர்ப்பு செய்த இந்த அறிஞருக்கு (?) கிதால் என்ற சாதாரண வார்த்தைக்குக் கூட அர்த்தம் தெரியாமல் போய்விட்டதா? அல்லது திட்டமிட்டே இருட்டடிப்பு செய்து மோசடி செய்கின்றாரா?

இஸ்லாமிய ஆட்சி அல்லாத நிலையில் ஜிஹாத் கடமையில்லை என்ற எங்கள் நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஜிஹாத் கடமையில்லை என்று மேடையில் பேசிக் கொண்டே இரகசிய அமைப்பு உருவாக்க எங்களுக்குத் தெரியாது என்பதை இங்கு கூறிக் கொள்கிறோம்.

கிதால் என்றால் ஆயுதம் தாங்கிப் போரிடுதல் என்ற அர்த்தம் உண்டு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் கிதால் என்று வரக்கூடிய எல்லா இடத்திலும் இதே பொருளைச் செய்ய முடியாது.

உங்களில் எவரேனும் தமக்கு முன்னால் தடுப்பு வைத்துக் கொண்டு தொழும் போது, யாராவது குறுக்கே செல்ல முயன்றால் அவரைத் தடுக்க வேண்டும். அதை அவர் எதிர்த்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் நிச்சயம் ஷைத்தானாவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்: புகாரி 509

இந்த ஹதீஸில் கிதால் என்ற வார்த்தை தான் இடம் பெற்றுள்ளது. இந்த சிறந்த அறிஞர்கள் (?) செய்வதைப் போன்று பொருள் செய்தால் தொழக் கூடிய ஒவ்வொருவரும் ஆயுதம் ஏந்திக் கொண்டு தான் வர வேண்டும்? இதை ஆதரித்து இனிமேல் தொழச் செல்பவருக்கு வாள், கத்தி போன்ற ஆயுதங்களை தமுமுகவினர் வழங்குவார்களா?

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம். முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால், நான் நோன்பாளி என்று இரு முறை கூறட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1894

இந்த ஹதீஸிலும் கிதால் என்ற வார்த்தை தான் இடம் பெற்றுள்ளது. இதற்கும் ஆயுதம் ஏந்தி போரிடுதல் என்ற அர்த்தம் கொடுக்க முடியாது. ஆயுதம் தாங்கி நம்மை வெட்ட வரும் போது, நான் நோன்பாளி என்று கூறுவது உயிரைக் காக்காது.

யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது அதை விற்று அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 437, 2223, 2224

இந்த ஹதீஸ்களில் சபிப்பானாக என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடங்களில், கிதால் என்ற வார்த்தை தான் இடம் பெற்றுள்ளது. அல்லாஹ் யூதர்கள் மீது வாளேந்திப் போரிடுவானாக என்று இந்த சிறந்த அறிஞர்கள் (?) பொருள் கொள்வார்களா?

எனவே கிதால் என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுதல் என்ற அர்த்தம் இருந்தாலும், அதை மட்டுமே இந்த வார்த்தை குறிக்காது என்பதை அறியலாம். அதன் அடிப்படையில் இந்த வசனத்தில் இடம் பெற்றிருக்கும் கிதால் என்பதற்கு வரம்பு மீறிய கூட்டத்தை சரியான வழிக்குக் கொண்டு வரக்கூடிய அனைத்து முகாந்திரங்களையும் இணக்கத்தை நாடுவோர் செய்ய வேண்டும் என்று தெளிவாக விளங்கலாம்.

நபிவழியின் விளக்கப்படி திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் கொடுத்திருப்பது எப்படி மார்க்கத்தை வளைப்பதாகும்? குர்ஆனின் வசனங்களைத் திரித்துக் கூறுவதாகும்? இவர்கள் தான் ஒரு ஒரு கருத்தில் இருந்து கொண்டு அதற்குத் தக்க குர்ஆனையும் ஹதீஸையும் வளைக்க முயற்சிக்கின்றார்கள். கிதால் என்பதற்கு வேறு அர்த்தங்கள் இருப்பது தெரிந்தும் ஆயுதம் தாங்கிப் போரிடுவதை மட்டுமே இந்த வசனம் குறிக்கும் என்று கூறுகின்றார்கள். இப்படி குர்ஆனையும், ஹதீஸையும் வளைக்கும் இவர்களுக்கு அல்லாஹ் கூறும் எச்சரிக்கையைக் கேளுங்கள்.

மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். (அல்குர்ஆன் 2:159)

அல்லாஹ்வின் வசனங்களை இவ்வளவு நெஞ்சழுத்தத்துடன் வளைக்கக் கிளம்பிய இவர்கள், உலக விஷயங்களில் எவ்வாறு உண்மையாக நடந்து கொள்வார்கள்? இவர்கள் பொய்யையே அடிப்படையாகக் கொண்டவர்கள் என்பதற்கு இந்த ஒரு ஆதாரமே போதும். பி.ஜே. என்ற தனி மனிதரை எதிர்க்க வேண்டும் என்பதற்காக கப்ர் வணக்கத்தைக் கூட ஆதரிக்கத் தயங்க மாட்டார்கள் போல் தெரிகின்றது.

கேள்வி 13: ஏகத்துவம் ஜூலை 2004 இதழின் பக்கம் 5ல், பேசப் போவது உலக விஷயம் தான் என்றெல்லாம் சாமாதானம் சொல்ல அழைத்துப் பார்த்தோம். என்று அவர்களே சொல்கிறார்கள். ஜிஹாத் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்ய வேண்டும். மாறாக உலக விஷயங்களுக்காக ஜிஹாத் செய்ய நம்மை மார்க்கம் அனுமதிக்கவில்லை. இது உலக விஷயம் தான் என்று இவர்களே சாட்சி சொல்லி விட்ட பிறகு அந்த விஷயத்தில் 49:9 வசனத்தை மேற்கோள் காட்டி போரிட வேண்டும் என்று எப்படிக் கட்டளையிடுகின்றார்? ஜிஹாத் அல்லாஹ்வுக்காகவா? பி.ஜே.வுக்காகவா?

ஜவாஹிருல்லாஹ்வை விவாதத்திற்கு அழைத்த போது, எனக்கு மார்க்க விஷயத்தில் ஞானமில்லை என்று கூறி நழுவி விடக் கூடாது என்பதற்காக, இது ஒன்றும் ஆய்வுக்குரிய விஷயமில்லை, உலக விஷயம் தான் என்று கூறினோôம். இதை விமர்சித்து எழுதியவர்கள், ஜிஹாத் அல்லாஹ்வுக்கு மட்டும் தான், உலக விஷயத்திற்குக் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

தலைசிறந்த மார்க்க அறிஞர்களே! ஜிஹாத் உலக விஷயத்திற்காகக் கிடையாது என்ற புது விதியை எங்கிருந்து கண்டு பிடித்தீர்கள்? இதை எந்த வசனம் சொல்கின்றது? எந்த ஹதீஸில் இந்தச் சட்டம் இடம் பெற்றுள்ளது என்று காட்ட முடியுமா?

முஃமின்களில் இரண்டு சாரார் சண்டையிட்டுக் கொண்டால்...என்ற 49:9 வசனமே உலக விஷயத்தைப் பற்றித் தான் கூறுகின்றது. ஒரு சாரார் இன்னொரு சாராரின் சொத்தை அநியாயமாகப் பறித்துக் கொண்டால் அதை எதிர்த்து இன்னொரு சாரார் போரிடுகின்றார்கள் என்றால் இது உலக விஷயம் தானே! அப்படியானால் இதுபோன்ற உலக விஷயங்களில் யாரேனும் அநியாயம் செய்தால் அதற்காகப் போராடக் கூடாது என்று சொல்லப் போகின்றார்களா?

தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர் தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),

நூல்: புகாரி 2480

"அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் என்னுடைய பொருளை பறிக்க வருகின்றார். நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகின்றீர்கள்?'' என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, "அதை அவரிடத்தில் கொடுக்காதே!'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். "அவர் என்னைக் கொன்று விட்டால்.. அதற்கு என்ன சொல்கின்றீர்கள்?'' என்று கேட்டார். அப்போது, "நீ ஷஹீத்'' என்று பதிலளித்தார்கள். "நான் அவரைக் கொன்று விட்டால்... இதற்கு என்ன சொல்கின்றீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு, "அவர் நரகத்தில்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 201

இந்த ஹதீஸ்களெல்லாம் சந்தேகத்துக்கிடமின்றி உலக விஷயத்திற்காகத் தானே ஜிஹாத் செய்யச் சொல்கின்றன. தமுமுகவின் கவுரவத்தைக் காப்பதற்காக இதற்கும் வேறு ஏதாவது அர்த்தம் கொடுத்து மாற்றப் போகின்றீர்களா?

பி.ஜே.யை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மார்க்கத்தில் இருப்பதை மறைத்து, இல்லாத புதுச் சட்டத்தை ஏன் புகுத்த முனைகின்றீர்கள்? ஒரு காலத்தில் நீங்கள் வெறுத்த தமுமுகவின் கவுரவம் மார்க்கத்தின் கவுரவத்தை விடவும் பெரிதாகி விட்டதா?

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)

என்ற வசனத்தை இந்த சிறந்த மார்க்க அறிஞர்களுக்கு (?) நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். (அல்குர்ஆன் 2:159)

மார்க்கத்தை மறைக்கும் இந்த சிறந்த மார்க்க அறிஞர்கள் (?) மேற்கண்ட இறைவசனத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நாம் தெரிந்து கொண்டதென்ன?

ஏற்கனவே பி.ஜே. மீது வெறுப்பு கொண்டவர்கள், நம்முடைய அமைப்பில் இருந்து கொண்டு ரகசிய அமைப்பு துவங்கியதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், ஊழலுக்காக நீக்கப்பட்டவர்கள் ஆகிய அனைவரும் தமுமுகவினருடன் ஒன்று சேர்ந்து கொண்டு களமிறங்கியுள்ளனர். இவர்களிடம் எந்தக் கொள்கையும் இல்லை. இவர்கள் பி.ஜே. என்ற தனிமனிதர் மீதுள்ள வெறுப்பு காரணமாக எதையும் செய்யத் தயாராகி விட்டார்கள் என்பதை இந்தப் பிரசுரம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

தமுமுகவினரைக் காப்பதற்காகக் களமியிறங்கியிருக்கும் இந்த சிறந்த அறிஞர் (?) பெருமக்களிடம் இறுதியாக நாம் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான். இந்த முபாஹலாவையே தலைப்பாக்கி பேசுவோம். இதனால் நாம் ஒவ்வொருவரும் நோட்டீஸ் போட்டு பதில் எழுதி, நம்முடைய சக்தி, நேரம் எல்லாம் வீணாக்கிக் கொள்ளும் அவசியம் ஏற்படாது. விவாதத்தின் போது கிடைக்கும் தெளிவைப் போல் பிரசுரங்களில் கிடைத்து விடாது. அதனால் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் நேரடியாக விவாதம் செய்வதற்கு வாருங்கள் என்று இந்த அழைப்பையே அறைகூவலாக விடுக்கின்றோம்.

EGATHUVAM NOV 2004