Mar 23, 2017

மிஃராஜின் பெயரால் கப்ஸாக்கள்

மிஃராஜின் பெயரால் கப்ஸாக்கள்

மிஃராஜ் என்ற பெயரில் எப்படி மார்க்கத்திற்கு முரணான காரியத்தைச் செய்து வருகிறார்களோ அது போன்று இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற கட்டுக் கதைகளையும் நம்பமுடியாத செய்திகளையும் எழுதி வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

1. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் உரையாடிக் கொண்டிருந்த போது, "சப்தமிட்டு பேசாதே! அடக்கிப் பேசு! முஹையத்தீன் தொட்டில் உறங்குகின்றார்'' என்று அல்லாஹ் கூறினானாம்.

2. நபி (ஸல்) அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த ஜிப்ரீல், ஹிஜாபுல் அக்பர் என்ற இடத்தை அடைந்தவுடன் பின் வாங்கி நபி (ஸல்) அவர்களை மட்டும் தனியாக விட்டு விட்டுப் போய் விட்டாராம். "என்ன ஜிப்ரீலே, என்னுடன் வராமல் பின் வாங்குகின்றீரே?'' என்று நபிகளார் கேட்ட போது, "இதற்கு மேல் ஒரு எட்டு முன்னேறினாலும் உடனே நான் கரிந்து சாம்பலாகி விடுவேன். அதனால் நீங்கள் மட்டும் செல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினாராம்.


3. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்ற போது, "முஹம்மதே, கொஞ்சம் நில்லுங்கள். உமது இரட்சகன் தொழுது கொண்டிருக்கின்றான்'' என்று அபூபக்ர் (ரலி)யின் குரல் கேட்டதாம். அல்லாஹ் யாரைத் தொழப் போகின்றான்? என்று நபி (ஸல்) அவர்கள் திடுக்குற்றார்களாம். உள்ளே போய் பார்த்தால் முட்டையின் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைக் கரு இருப்பதைப் போல் திரும்பிப் பார்க்கும் இடத்திலெல்லாம் அல்லாஹ் இருந்தானாம். அல்லாஹ் தொழுததைப் பற்றி கேட்ட போது, "நான் யாரைத் தொழப் போகின்றேன். உம் மீது ஸலவாத் சொன்னேன். அது தான் தொழுததாக உமக்குக் கூறப்பட்டது'' என்று அல்லாஹ் கூறினானாம். "அபூபக்ரின் குரல் கேட்டதே'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, "நீர் பயந்து விடக் கூடாது என்பதற்காக அபூபக்ரைப் போன்று ஒரு மலக்கைப் பேச வைத்தேன்'' என்று அல்லாஹ் கூறினானாம்.


4. ஜிப்ரீல் பாங்கு சொல்ல, அல்லாஹ் அதற்குப் பதில் கூறினானாம். நபி (ஸல்) அவர்கள் இமாமாக நின்று தொழுவிக்க, ஜிப்ரீலும் மலக்குகள் அனைவரும் பின்பற்றித் தொழுதார்களாம். இரண்டு ரக்அத் முடிந்தவுடன் தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்று ஜிப்ரீல் நினைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் எழுந்து மூன்றாவது ரக்அத் தொழுதார்களாம். தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்று அல்லாஹ்வும் நினைத்தானாம். உடனே நபி (ஸல்) அவர்கள் கையை உயர்த்தி குனூத் ஓதினார்களாம். இப்படித் தான் வித்ருத் தொழுகை உருவானதாம்.


5. மிஃராஜில் ரூஹானியத்தான மிஃராஜ் என்றும் ஜிஸ்மியத்தான மிஃராஜ் என்றும் இரண்டு வகையுண்டாம். உடலில்லாமல் உயிர் மட்டும் அல்லாஹ்வை தரிசிக்கும் தரிசனத்திற்கு ரூஹானியத்தான மிஃராஜ் என்றும், நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட மிஃராஜ் ஜிஸ்மியத்தான மிஃராஜ் என்றும் கதை விட்டுள்ளார்கள்.


6. ரூஹானிய்யத்தான மிஃராஜ் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமன்றி ஏனைய நபிமார்களுக்கும் ஏற்பட்டுள்ளதாம். அது மட்டுமின்றி ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், அவுயாக்கள் போன்ற நல்லடியார்களுக்கும் இந்த ரூஹானிய்யத்தான மிஃராஜ் ஏற்பட்டுள்ளது என்று கதை விட்டு, மாபெரும் அற்புத நிகழ்வான நபிகள் நாயகத்தின் விண்ணுகப் பயணத்தையே கேக் கூத்தாக்கியுள்ளனர்.


7. நபி (ஸல்) அவர்களுக்கு ரூஹானிய்யத்தான மிஃராஜ் 33 தடவை ஏற்பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாம். முஹைதீன் அப்துல் காதர் ஜீலானிக்கு ரூஹானியத்தான மிஃராஜ் ஏற்பட்ட போது முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானியுடன் அல்லாஹ் பேசினானாம். அப்போது நடந்த உரையாடல் நாசூத், மலகூத், ஜபரூத், லாஹுத் என்பதையெல்லாம் அல்லாஹ் முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானிக்குக் கற்றுக் கொடுத்தானாம்.


இன்னும் இது போன்ற ஏராளமான கதைகளையும், கப்ஸாக்களையும் மிஃராஜின் பெயரால் அவிழ்த்து விட்டுள்ளனர்.

சில சம்பவங்களை விமர்சிக்கும் போது, இந்த வசனத்திற்கு இந்தச் சம்பவம் மாற்றமாக அமைந்துள்ளது என்றும், இந்த ஹதீசுக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் விளக்கமளிப்போம். ஆனால் குர்ஆன், ஹதீஸோடு ஒப்பிட்டு விளக்க முடியாத அளவுக்கு, சாதாரண மக்கள் இவற்றைப் படித்தால் கூட கப்ஸாக்கள் என்று விளங்கும் அளவுக்கு இந்தக் கதைகள் அமைந்துள்ளன.

அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக் காட்டுவதற்காக, நபி (ஸல்) அவர்களுக்கு அவன் நிகழ்த்திக் காட்டிய இந்த அற்புதத்தைக் கூற வந்தவர்கள் அல்லாஹ்வைக் கே செய்யும் விதமாக, அவனைப் பலவீனமானவனாக சித்தரிக்கக் கூடிய கதைகளை எழுதி வைத்து, பிரச்சாரமும் செய்து வருகின்றனர்.

முஃமின்களின் ஈமானைச் சோதிப்பதற்காக மிஃராஜ் எனும் அற்புதத்தை அல்லாஹ் நிகழ்த்தினான். ஆனால் இவர்களோ ஈமானுக்கே வேட்டு வைக்கக் கூடிய விதத்தில் அல்லாஹ்வையும், நபி (ஸல்) அவர்களையும், ஜிப்ரீல் (அலை) அவர்களையும் மட்டம் தட்டி எழுதி வைத்துள்ளது தான் வேதனை!

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? (அல்குர்ஆன் 7:37)

"என் மீது பொய் சொல்வதென்பது வேறு யார் மீதும் பொய் சொல்வதைப் போன்றதல்ல. என் மீது வேண்டுமென்று பொய் சொல்பவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.


அறிவிப்பவர் : முகீரா (ரலி),

நூல் : முஸ்லிம்

அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் பொய்யை இட்டுக் கட்டிக் கூறுவது நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் மாபாதகச் செயலாகும். எனவே இது போன்ற கதைகளைப் புறக்கணிப்போமாக!

EGATHUVAM SEP 2004