Feb 27, 2017

ஜோதிடமும் சூனியமும்

ஜோதிடமும் சூனியமும்
ஆர். ரஹ்மத்துல்லாஹ். எம்.ஐ.எஸ்.சி.
அல்லாஹ்வோடு பல கடவுள் இருப்பதாக நம்புவதும் அல்லாஹ்வுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளை மற்றவர்களுக்குச் செய்வதும் இணைவைத்தல் என நாம் அறிந்திருக்கிறோம். அதைப் போன்றுதான் அல்லாஹ்வுக்கு இருக்கும் ஆற்றல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும் இணை வைத்தலாகும்.
அல்லாஹ்வுக்கு ஏராளமான பண்புகள் உள்ளன. அந்தப் பண்புகளில் ஏதாவது ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று ஒருவன் நம்பினால் அந்தப் பண்பு விஷயத்தில் அல்லாஹ்வைப் போல் அந்த மனிதனைக் கருதியவனாக ஆகிவிடுவான். அதாவது அல்லாஹ் வுக்கு இணை கற்பித்தவனாகி விடுவான்.
இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ள இயலும்.
அவனைப் போல் எதுவும் இல்லை.
திருக்குர்ஆன் 42:11
அவனுக்கு நிகராக யாருமில்லை.
திருக்குர்ஆன் 112:4
முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணை வைத்தல் அன்று. மாறாக, இறைவனது தன்மைகளில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போலவே மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணைவைத்தலாகும்.
எந்த ஒரு பண்பாவது அல்லாஹ்வுக்கு இருப்பது போல் மற்றவருக்கும் உள்ளது என்று நம்பினால் அதுவும் இணை கற்பித்தல் என்பதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு ஜோசியத்தையும் சூனியத்தையும் ஆராய்வோம்.
ஜோசியம் பார்ப்பது இணை வைத்தலே!
"வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 27:65
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. 
அல்குர்ஆன் 6:59
மறைவான விஷயம் மலக்கு மார்கள், ஜின்கள், நபிமார்கள் உட்பட வேறு யாருக்கும் தெரியாது என்பதை மிகத் தெளிவாக இறைவன் விளக்குகின்றான். எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாகச் சொல்லி ஜோசியம் பார்ப்பது, அருள்வாக்கு சொல்வது, பால் கிதாபு பார்ப்பது ஆகிய அனைத்திற்கும் இந்த ஒரு வசனமே மரண அடியாக இருக்கிறது.
மறைவான ஞானத்திற்குச் சொந்தக் காரன் அல்லாஹ் மட்டுமே! அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள அந்த ஆற்றல் ஜோசியக்காரனுக்கும், பால் கிதாபு பார்ப்பவனுக்கும் இருப்பதாக நம்பினால் அது இணை வைத்தலாகும்.
இதைப் பின்வரும் நபிமொழி மிகத் தெளிவாக விளக்குகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒருவர் குறிகாரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பினால் அவர் முஹம்மதுக்கு அருளப்பட்ட(இஸ்லாத்)தை விட்டும் நீங்கிவிட்டார்.
அறிவிப்பர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவுத் (3405)
சூன்யமும் ஒரு இணைவைத்தலே!
சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் குற்றமாக அமைந்துள்ளது. அது எப்படி என்று பார்ப்போம்.
பிறருக்குப் பாதிப்பு ஏற்படுத்துதல் என்ற தன்மை அல்லாஹ்வுக்கு உண்டு. மனிதர்களுக்கும் உண்டு.
அல்லாஹ் ஒரு மனிதனின் காலை முறிக்க நினைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பெரிய அரிவாளை எடுத்து வந்து அந்த மனிதனின் காலை அல்லாஹ் வெட்ட மாட்டான். அந்த மனிதனைத் தொடாமலே எந்தக் கருவியையும் பயன்படுத்தாமலே முறிந்து போ என்பான். அது முறிந்து விடும்.
ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் காலை முறிக்க நினைத்தால் அரிவாளையோ, உருட்டுக்கட்டையையோ எடுத்து வந்து காலைத் தாக்கியே முறிக்க முடியும்.
அல்லாஹ் ஒருவனை மன நோயாளியாக ஆக்க நினைத்தால் மன நோயாளியாக ஆகு என்பான். உடனே அந்த மனிதன் மன நோயாளியாக ஆகிவிடுவான். ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மன நோயாளியாக ஆக்க நினைத்தால் அதற்குரிய மாத்திரைகளை அல்லது மருந்தை அவனுக்குள் செலுத்தி, அல்லது மூளை சிதையும் அளவுக்குத் தலையில் தாக்கியே மன நோயாளியாக ஆக்க முடியும்.
இந்த விஷயத்தில் அல்லாஹ் வுக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் பளிச்சென்று தெரிகிறது.
அவன் எதைச் செய்ய நாடுகிறானோ ஆகு என்பான்; உடனே ஆகிவிடும் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் 2:117, 3:47, 3:59, 6:73, 16:40, 19:35, 36:82, 40:68, ஆகிய வசனங்களில் தெளிவுபடக் கூறுகிறான்.
ஆகு என்று சொல்லி ஆக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு.
ஆனால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவோர் சூனியக்காரனை எந்த இடத்தில் வைக்கிறார்கள்?
சூனியக்காரன் உருட்டுக்கட்டை யால் காலை முறிப்பான் என்று நம்புவதில்லை. அல்லாஹ்வைப் போல் ஆகு என்று கட்டளையிட்டு பாதிப்பை ஏற்படுத்துவான் என்று தான் நம்புகிறார்கள்.
சூனியக்காரன் எந்த மருந்தையும் செலுத்தாமல் ஆகு எனக் கூறி ஒருவனைப் பைத்தியமாக ஆக்க வல்லவன் என்று நம்புகிறார்கள்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கவலைப்படுத்த, காயப் படுத்த உலகில் எந்த வழிமுறைகள் உள்ளனவோ அவற்றில் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலமாக ஒருவன் மற்றவனுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றனர்.
உதாரணமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கத்தியால் குத்தலாம். அல்லது இருவருமே கத்தியால் குத்திக் கொள்ளலாம். இதனால் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ பாதிப்பு ஏற்படும்.
இது போன்று ஒருவருக்கொருவர் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்
ஒருவர் இன்னொருவரைத் திட்டுகின்றார்; அல்லது அவதூறு சொல்கின்றார் என்றால், யாரைத் திட்டுகின்றாரோ அல்லது அவதூறு சொல்கின்றாரோ அவரைக் கவலையடையச் செய்யலாம்.
இது போன்ற வழிகளில் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பாதிப்பை ஏற்படுத்தலாம். இதைச் செய்வதற்காகத் தனியாக கற்றுத்தேறும் அவசியம் இல்லை. யாருக்கு எதிராக யாரும் இதைச் செய்ய முடியும்.
உலகத்தில் மனிதர்கள் சக மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு அல்லாஹ் எந்த வழிமுறையை ஏற்படுத்தியுள்ளானோ அந்த வழிமுறைகள் தவிர மற்ற அனைத்து வழிமுறைகளும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை.
சூனியம் செய்வதாகக் கூறிக் கொள்பவனிடம் போய் ஒருவருக்குச் சூனியம் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், பாதிப்பு ஏற்படுத்தப்பட வேண்டிய நபரைத் தொடாமல், அருகில் வராமல், அவரைப் பார்க்காமல் எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டு அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவார் என்று நம்புகின்றனர்.
யாருக்குப் பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவரின் சட்டை, வியர்வை, காலடி மண், தலைமுடி இது போன்றவற்றை வைத்துக் கொண்டு அதனைப் பொம்மை போல் செய்து பாதிப்பு ஏற்படுத்த வேண்டிய வரின் பெயரை அந்தப் பொம்மைக்கு வைத்து அந்தப் பொம்மையின் வயிற்றில் குத்தினால் அவரது வயிற்றுக்குப் பாதிப்பு ஏற்படும். அந்தப் பொம்மையின் கண்ணைக் குத்தினால் இவரின் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படும். இது தான் சூனியம் என்று மக்கள் நம்புகின்றனர். உடலுக்கு மட்டுமின்றி மனதிலும் பாதிப்பை ஏற்படுத்த சூனியக்காரனால் இயலும் என்று நம்புகின்றனர்.
ஒருவருக்குப் பாதிப்பை ஏற்படுத்த எந்த வழிமுறைகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளானோ அவற்றில் எந்த ஒன்றையும் சூனியக்காரன் செய்ய மாட்டான்.
சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்பக் கூடியவர்கள் சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் செயல்படும் திறன் படைத்தவன் என்று தான் நம்புகிறார்கள்.
இவ்வாறு அல்லாஹ்வுக்கே உரித்தான ஆற்றலை சூனியக் காரனுக்கு இருப்பதாக நம்புவதும் இணைவத்தலாகும். சூனியத்தை உண்மையென்று நம்பியவன் ஒரு போதும் சுவனம் செல்லமாட்டான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)
நூல்: அஹ்மது (26212)
சூனியத்தை ஒருவன் நம்பினால் அவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்பதைத் தெளிவான முறையில் இந்த நபிமொழி சொல்கிறது.
அல்லாஹ்வின் ஆற்றலை ஜோதிடக்காரனுக்கும் சூனியக் காரனுக்கும் இருப்பதாக நம்பி இம்மையிலும் மறுமையிலும் நஷ்டம் அடையாமலிருக்க வல்ல ரஹ்மான் நம்மைக் காப்பானாக!

EGATHUVAM JAN 2016