Oct 26, 2016

குர்ஆனை தூய்மையின்றி தெடாலாமா? ஓதலாமா?

குர்ஆனை தூய்மையின்றி தெடாலாமா? ஓதலாமா?

எம்.ஐ. சுலைமான்

உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்ட வந்த உலகப் பொதுமறை திருக்குர்ஆன் என்று இறைவன் அக்குர்ஆனிலேயே பல இடங்களில் தெளிவு படுத்தியுள்ளான். மறுமை வெற்றி திருக்குர்ஆன் வழியில் நடந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை அறிவுள்ள எவரும் அறிவர். இந்த உண்மையை முஸ்லிம் சமுதாயத்தினரும் உணர்ந்துள்ளனர். திருக்குர்ஆனைப் பற்றிப் பேசும் போது இந்த உண்மையை வெளிப்படுத்துவர். ஆனால் மார்க்கச் சட்டங்கள் என்ற பெயரில் திருக்குர்ஆனிலிருந்து மக்களை அந்நியப்படுத்தும் பல சட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

திருக்குர்ஆனைத் தொடுவதற்கு உளூ அவசியம்! குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் ஏற்பட்டவர்கள், இஸ்லாத்தை ஏற்காதவர்கள் போன்றோர் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது; தொடுவது ஹராம் என்று கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, திருக்குர்ஆனின் பக்கம் மக்கள் செல்வதைத் தடுத்து வருகின்றனர். இவ்வாறு தடுப்பதற்கு இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் ஆதாரம் உள்ளதா? என்று வினவினால் அதற்கு சில ஆதாரங்களை எடுத்துரைக்கின்றனர். இந்த ஆதாரங்களின் தரம் என்ன? இவற்றை ஏற்கலாமா? என்பதைக் காண்போம்.

திருக்குர்ஆனை உளூவின்றி தொடக் கூடாது என்பதற்கு, திருக்குர்ஆனிலிருந்தே ஒரு சான்றை எடுத்து வைக்கின்றனர். அதைக் காண்போம்!

தூய்மையானவர்கள் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள்.

(
அல்குர்ஆன் 
56:79)உளூவின்றி திருக்குர்ஆனைத் தொடக்கூடாது என்பதற்கு வலுவான ஆதாரமாக இந்த வசனத்தை எடுத்து வைக்கின்றனர். பல திருக்குர்ஆன் பிரதிகளின் அட்டை முகப்பிலும் இவ்வசனம் அச்சிடப்பட்டு விநியோகிக்கப் படுகின்றது.

இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள், ஆம்! திருக்குர்ஆனை உளூவின்றி, தூய்மையின்றி தொடக்கூடாது என்று தான் முடிவு செய்வார்கள். ஆனால் இந்த வசனத்தின் முந்தைய வசனங்களையும் இது எப்போது இறங்கியது என்பதையும் திருக்குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு இறக்கப்பட்டது என்பதையும் விளங்கினால் இவர்களின் கருத்து முற்றிலும் தவறானது என்பதை விளங்கலாம்.

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள "தூய்மையானவர்கள்' என்றால் யார்? தொடமாட்டார்கள் என்றால் எதை? என்பதை முதலில் காண்போம்.
நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவில் தான் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் பதிவு செய்து கொள்வார்கள் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் இறக்கப்படவில்லை எனும் போது தொடுதல் என்ற கேள்வியே எழாது.

தொடும் விதத்தில் திருக்குர்ஆன் இறக்கப் பட்டிருந்தால் மட்டும் தான் "இந்தக் குர்ஆனை தூய்மையானவர்களைத் தவிர யாரும் தொட மாட்டார்கள்' என்று கூற முடியும்.

இந்த அடிப்படையில் 56:79 வசனத்தில் கூறப்பட்ட தொடுதல் என்பது நமது கையில் உள்ள குர்ஆனைக் குறிக்காது என்பதை விளங்கலாம். மேலும் இக்கருத்தை வலுவூட்டும் வகையில் முந்தைய வசனங்கள் அமைந்துள்ளன.

இது பாதுகாக்கப் பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 56:77-79)

56:79 வசனத்தின் முந்தைய இரண்டு வசனங்களை நீங்கள் படிக்கும் போது ஓர் பேருண்மை உங்களுக்கு விளங்கும்.

"இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கின்ற மதிப்பு மிக்க திருக்குர்ஆன்' என்று கூறுகின்றான். அடுத்த வசனத்தில் "தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள்' என்று கூறுகின்றான்.

இப்போது "அதை' என்ற சொல் நம் கையில் இருக்கும் திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. பாதுகாக்கப் பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற பேருண்மை தெளிவாகின்றது.

இக்கருத்தை மேலும் வலுவூட்டும் வண்ணம் திருக்குர்ஆனின் 80ம் அத்தியாயம் 11-16வசனங்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அமைந்துள்ளன.

அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை! விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப் படுத்தப்பட்ட மதிப்பு மிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கையில் உள்ளது.
(
அல்குர்ஆன் 80:11-16)

இவ்வசனமும் திருக்குர்ஆனின் மூலப் பிரதி எங்குள்ளது என்பதைப் பற்றி பேசுகின்றது. இவ்வசனங்களிலும் 56:79 வசனத்தில் கூறப்பட்டதைப் போன்றே கூறப்பட்டிருந்தாலும் 56:79 வசனத்தை விட கூடுதல் தெளிவுடனும் விளக்கத்துடனும் காணப்படுகின்றது.

"தூய்மையானவர்கள்' என்று 56:79 வசனத்தில் கூறப்பட்டுள்ளவர்கள் யார்? என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது. அவர்கள் வானவர்கள் தாம் என்பது இவ்வசனத்திலிருந்து அறிய முடிகின்றது.
இமாம் மாலிக் அவர்களும் 56:79 வசனம் தொடர்பாக தமது முஅத்தா என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.


"தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள்'' என்ற வசனம் தொடர்பாக நான் செவியேற்றதில் மிகவும் அழகானது, இவ்வசனம் "அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை! விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப் படுத்தப்பட்ட மதிப்பு மிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கையில் உள்ளது. (80:11-16) என்ற "அபஸ வதவல்லா' எனும் அத்தியாயத்தில் கூறப்பட்ட கருத்தின் இடத்தில் இருப்பது என்பது தான்.

அடுத்து இந்த 56:79 வசனம் எப்போது இறங்கியது என்பதைக் கவனித்தால் இவ்வசனத்தின் பொருள் இன்னும் தெளிவாக விளங்கும்.

குறைஷிக் குல நிராகரிப்பாளர்கள் இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள் கொண்டு வருகின்றன என்று எண்ணிய போது அல்லாஹுத் தஆலா, "தூய்மையான(வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள்'' என்று அறிவித்தான்.

"இதை ஷைத்தான்கள் இறக்கவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப் பட்டவராவர்'' (அல்குர்ஆன் 26:210-212) என்ற வசனமும் இதைப் போன்று தான் அமைந்துள்ளது என்று இப்னு ஜைத் குறிப்பிடுகின்றார். இக்கருத்து வலிமை வாய்ந்ததாகும் என்று இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தமது குர்ஆன் விரிவுரையில் குறிப்பிடுகின்றார்கள்.
(நூல்: தஃப்ஸீர் இப்னுகஸீர், பாகம்: 4, பக்கம்: 299)

"ஒரு குர்ஆன் வசனத்தை இன்னொரு குர்ஆன் வசனம் தெளிவு படுத்தும்' என்ற அடிப்படையில் 56:77 வசனம் எதற்காக இறங்கியது என்பதை 26:210-212 வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இந்தக் குர்ஆன் ஷைத்தான்கள் கொண்டு வந்தது என்று இணை வைப்பவர்கள் குற்றம் சாட்டிய போது தான், "இக்குர்ஆன் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்ற) பாதுகாக்கப் பட்ட ஏட்டில் இருக்கின்றது. இதைத் தூய்மையான வானவர்களைத் தவிர மற்றவர்கள் தொட முடியாது. அவ்வாறிருக்க ஷைத்தான் எவ்வாறு கொண்டு வர முடியும்? என்று அல்லாஹ் கேட்கின்றான்.

இந்தப் பின்னணியைப் பார்க்கும் போது, தூய்மையானவர்கள் என்பது நம்மைக் குறிப்பது அல்ல! அது வானவர்களைக் குறிக்கின்றது என்றும், "அதை' என்பது, நம் கையில் உள்ள குர்ஆனைக் குறிப்பது அல்ல! அது விண்ணுலகில் உள்ளது என்பதும் தெளிவாக விளங்குகின்றது.

"தூய்மையானவர்கள்' என்பது வானவர்களையும், "குர்ஆன்' என்பது வானத்தில் உள்ள குர்ஆனையும் தான் குறிக்கும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

"அதைத் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) தொட மாட்டார்கள்'' என்ற வசனத்தில் கூறப்பட்டுள்ள தொடுதல் என்பது வானத்தில் உள்ள வேதமாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடுகின்றார்கள்.
(நூல்: தஃப்ஸீர் தப்ரீ, பாகம்: 27, பக்கம்: 205)

"தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) தொட மாட்டார்கள்'' அதாவது வானவர்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.
(நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்: 4, பக்கம்: 299)

மேற்கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் ஒன்றிணைத்துப் பார்க்கும் போது, 56:79வசனத்தில் கூறப்பட்ட "தூய்மையானவர்கள்' என்பது வானவர்கள் என்பதும், "அதை' என்று கூறப்பட்டுள்ளது, வானத்தில் பாதுகாக்கப் பட்ட ஏட்டில் உள்ள குர்ஆன் என்பதும் ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது. எனவே 56:79 வசனத்தை வைத்துக் கொண்டு, தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்று வாதிட முடியாது.

வளரும் இன்ஷா அல்லாஹ்


(EGATHUVAM NOV 2003)