Jul 27, 2015

சொல்வோம் தஸ்பீஹை சுருட்டுவோம் நன்மைகளை

சொல்வோம் தஸ்பீஹை சுருட்டுவோம் நன்மைகளை

எம். ஷம்சுல்லுஹா

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள் சின்னஞ்சிறு அமல்களையும் செய்வதில் அலட்சியம் காட்டி விடக் கூடாது. உதாரணத்திற்கு சுப்ஹானல்லாஹ் என்று சொல்லும் தஸ்பீஹை எடுத்துக் கொள்வோம். நம்மில் பலர் தொழுது விட்டு முப்பத்து மூன்று தடவை சொல்ல வேண்டிய இந்த தஸ்பீஹை கண்டு கொள்வது கிடையாது. தொழுகை முடிந்தவுடன் துள்ளிக் குதித்து தப்பி ஓடுவதைத் தான் வழக்கமாகக் கொண்டிருக்கின்றோம். தொழுகை முடிந்த பின், இதர நேரங்களில், ஓடும் வாகனங்களில், ஓய்ந்திருக்கும் வேளைகளில் என்று கிடைக்கின்ற கால அவகாசங்களில் சுப்ஹானல்லாஹ் என்று வாய்க்கு எளிமையான இந்தச் சிறிய வார்த்தையைச் சொல்லத் தவறி விடுகின்றோம். இதற்குக் காரணம் இதற்குரிய நன்மைகளை, அதன் சிறப்புகளை நாம் அறியாமல் இருப்பது தான். இப்போது அந்த நன்மைகளைக் காண்போம்.

உடல் களைப்பைப் போக்கும் உன்னத மருந்து
ஃபாத்திமா (ரலி) அவர்கள் மாவு அரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப் பட்டிருக்கின்றார்கள் எனும் செய்தி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பணியாளைக் கேட்கச் சென்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. ஆகவே ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் வந்தவுடன் ஆயிஷா (ரலி) அவர்கள் விஷயத்தைச் சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்று விட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முயன்றோம். நபி (ஸல்) அவர்கள் உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள்என்று கூறி விட்டு எங்களுக்கு இடையே அமர்ந்தார்கள். (அவர்களின் பாதம் என் மீது பட்டதால்) நான் அவர்களுடைய பாதத்தின் குளிர்ச்சியை என் இதயத்தில் உணர்ந்தேன். பின்னர், “நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிகப் பெரியவன்என்று முப்பத்து நான்கு தடவையும், “அல்ஹம்துலில்லாஹ் புகழனைத்தும் அல்லாஹ்விற்கேஎன்று முப்பத்து மூன்று தடவையும், ”சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்என்று முப்பத்து மூன்று தடவையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்ததாகும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் அலீ (ரலி),

நூல் புகாரி 3113

பாவங்கள் மன்னிக்கப்படுதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடிய வண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால், “உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்என்று அவர்கள் (தம்மில்) ஒருவரையொருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகின்றவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களது இறைவன், “என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?” என்று கேட்கின்றான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவான். அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றனர்என்று வானவர்கள் கூறுகின்றனர்.

அதற்கு இறைவன், “அவர்கள் என்னைப் பார்த்திருக்கின்றார்களா?” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை. உன் மீது ஆணையாக அவர்கள் உன்னைப் பார்த்ததில்லைஎன்று பதிலளிப்பார்கள். என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள். இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், “அவர்கள் என்னிடம் என்ன வேண்டுகின்றார்கள்என்று கேட்பான். அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தை கேட்கின்றனர்என்று வானவர்கள் கூறுவார்கள். அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?” என்று இறைவன் கேட்பான். இல்லை. உன் மீது ஆணையாக அதிபதியே, அதை அவர்கள் பார்த்ததில்லைஎன்று வானவர்கள் கூறுவார்கள். அதற்கு இறைவன் அவ்வாறாயின் அதைப் பார்த்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்என்று கேட்பான். சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசை கொண்டு அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்.

 ”அவர்கள் எதிலிருந்து பாதுகாப்பு தேடுவார்கள்?” என்று இறைவன் வினவுவான். நரகத்திலிருந்துஎன்று வானவர்கள் பதிலளிப்பர். அதனை அவர்கள் பார்த்திருக்கின்றார்களா?” என்று இறைவன் கேட்பான். வானவர்கள், “இல்லை, உன் மீது ஆணையாக அதை அவர்கள் பார்த்ததில்லைஎன்று கூறுவர். அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்களின் நிலை என்னவாயிருக்கும்?” என்று கேட்பான். நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்என்று வானவர்கள் கூறுவர். அப்போது இறைவன், “ஆகவே அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகின்றேன்என்று கூறுவான்.

அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், “இன்ன மனிதன் உன்னைப் போற்றுகின்ற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ ஒரு தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்என்று கூறுவார். அதற்கு இறைவன், “அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் பாக்கியமற்றவனாக ஆக மாட்டான்என்று கூறுவான்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி),

நூல் புகாரி 6408

ஜகாத்,ஹஜ்ஜை ஈடுகட்டும் நன்மை
ஏழை மக்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கின்றார்கள். நாங்கள் தொழுவது போலவே அவர்களும் தொழுகின்றார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போலவே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர். உம்ரா செய்கின்றனர். அறப்போர் செய்கின்றனர். தர்மமும் செய்கின்றனர்என்று முறையிட்டனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகின்றேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்தி விட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கின்றீர்களோ அவர்களும் அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள். (அந்தக் காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை இறைவனைத் துதியுங்கள். 33 தடவை இறைவனைப் புகழுங்கள். 33 தடவை இறைவனைப் பெருமைப் படுத்துங்கள்என்று கூறினார்கள்.

இது வஷயத்தில் நாங்கள் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர், சுப்ஹானல்லாஹ் 33 தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும், அல்லாஹு அக்பர் 34 தடவையும் கூறலானோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர் என்று 33 தடவை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையும் 33 தடவைகள் கூறியதாக அமையும்என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி),

நூல் புகாரி 843

கடல் நுரை அளவும் கரைந்து போகும் பாவங்கள்
 ”சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப்பட்டு விடுகின்றன. அவை கடலின் நுரை போன்று இருந்தாலும் சரியேஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி),

நூல் புகாரி 6405

வானம், பூமி நிறைகின்ற தஸ்பீஹ்
 தூய்மை ஈமானில் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் (என்று சொல்வது) எடையை நிறைக்கின்றது. சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் (என்று சொல்வது) வானம், பூமிக்கு இடையில் உள்ளவற்றை நிறைக்கின்றது. தொழுகை ஒளியாகும். தர்மம் ஆதாரமாகும். பொறிமை பிரகாசமாகும். குர்ஆன் உனக்கு சாதகமான அல்லது பாதகமான ஆதாரமாகும். மக்கள் அனைவரும் முயற்சி செய்கின்றனர். தமது ஆத்மாவை (சுவனத்திற்காக) விற்று அதை விடுதலை செய்து விடுகின்றனர். அல்லது அதை (நரகத்திற்காக விற்று) நாசப்படுத்தி விடுகின்றார்.

அறிவிப்பவர் அபூமாலிக் அல்அஷ்அரி,

நூல் முஸ்லிம் 328

ஏகத்துவம் ஜூன் 2003